
தேனி
அம்மா அரசு என சொல்லி கொள்ளும் முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு, தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்து வருகிறார் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை திடலில் வியாழக்கிழமை இரவு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது அவர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் மத்திய அரசு கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, காலதாமதம் செய்து வருகிறது.
பிரதமர், அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவு திட்டத்தை தயாரிக்க முடியவில்லை என கால அவகாசம் கேட்பது உச்ச நீதிமன்றத்தை கேவலப்படுத்தும் செயல்.
தமிழக மாணவர்கள் கேரளம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? தமிழக மாணவர்கள் யாரும் மருத்துவம் படிக்கக் கூடாது என மோடி அரசு துரோகம் இழைத்து வருகிறது.
அம்மா அரசு என சொல்லி கொள்ளும் முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு, தமிழகத்தின் உரிமைகளை காவு கொடுத்து வருகிறார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக சொல்லும் இவர்களால் ஒக்கி புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரண நிதியோ பெற முடியவில்லை. சிபிஐ, வருமான வரி சோதனைக்கு பயந்துதான் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளனர்.
நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு நடைபயண தொடக்க விழாவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினரால் வர இயலாதது குறித்து எழுத்துப் பூர்வமாக வைகோவுக்கு தெரிவித்தோம். ஆனால், நியூட்ரினோ விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை வைகோ விமர்சித்து வருகிறார்.
மத்திய அரசு திட்டத்தை அறிவித்த நிலையில் உடனே எதிர்ப்பது சரியல்ல. வைகோ நடத்திய நடை பயணத்தை எதிர்க்கவில்லை. இத்திட்டத்தை பொருத்தவரையில் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும், ஆய்வுக்கூடம் அமைப்பதால் முல்லைப் பெரியாறுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் சொல்லி, மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தால் மக்களுக்கு ஆபத்து என்றால் எதிர்த்து போராடும் முதல் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். கருத்தொற்றுமை உள்ள பிரச்சனைகளில் இணைந்து செயல்படுவோம். கருத்தொற்றுமை இல்லாத பிரச்னைகளில் தனித்து செயல்படுவதுதான் முறை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த கட்சிக்கும் கட்டுப்பட்டதல்ல.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 152 அடிக்கு நீரை தேக்க தமிழக, கேரள அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் பாண்டியன் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்கின்றனர்.