விலைபோன நிர்வாகிகள்.. தேர்தல் தோல்வி.. கட்சி நடத்துவதில் அர்ததமில்லை – தொண்டர்களிடம் நொந்துகொண்ட ராமதாஸ்!

By manimegalai aFirst Published Nov 20, 2021, 6:34 PM IST
Highlights

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட நம்மிடம் வேட்பாளர்கள் இல்லாமல் போனது வெட்கக்கேடானது. நிர்வாகிகள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளரிடம் விலைபோய் விட்டனர் என்றும் ராமதாஸ் நொந்து கொண்டார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கூட நம்மிடம் வேட்பாளர்கள் இல்லாமல் போனது வெட்கக்கேடானது. நிர்வாகிகள் அனைவரும் திமுக, அதிமுக வேட்பாளரிடம் விலைபோய் விட்டனர் என்றும் ராமதாஸ் நொந்து கொண்டார்.

கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தொண்டர்களை நேரடியாக சந்திப்பதை தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான அனைத்து கூட்டங்களும், காணொலி மூலமாகவே நடைபெற்று வந்தது. தேர்தல் சமயத்தில் மட்டும் ஓரிரு நாட்கள் பரப்புரையில் ஈடுபட்ட ராமதாஸ், காரில் இருந்தபடியே பேசிவிட்டுச் சென்றார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ராமதாஸ் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். மருத்துவர் அய்யாவை காண நிர்வாகிகள் ஆர்வமாக இருந்த நிலையில், தேர்தல் தோல்வி குறித்து ராமதாஸ் ஆவேசமாக பேசியதில் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மயிலம், செஞ்சி, வானூர், உள்ளிட்ட தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது:

42 ஆண்டுகால அரசியல் பயணத்தில் பாமக என்கின்ற கட்சியை தொடங்கி 32 ஆண்டுகாலம் ஆகிறது. ஆனால் இன்று வரை ஒரு முறை கூட தமிழகத்தில் நாம் ஆட்சியை பிடிக்க வில்லை கடைசியாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் 5000 ஒன்றிய கவுன்சிலர்கள் இதில் 145 மட்டுமே வெற்றி பெற்றோம். மயிலம், திண்டிவனம், வானூர், செஞ்சி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் 10 ஒன்றிய கவுன்சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். கட்சி தொடங்கி 32ஆண்டுகளில் தனியாக நின்றபோது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றார். அதன்பிறகு தனியாக நின்று நமக்கு வெற்றி பெற சக்தி இல்லை, பணமில்லை என்று கூறி கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் நிர்வாகிகள் கூறினீர்கள்

உங்கள் விருப்பத்தின்படியே, கடந்த 32 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து தொடர்ந்து போட்டியிட்டு வந்தோம் அதன் பயனாக 18, 20 என்று சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம். 6  நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மத்திய அமைச்சர்களையும் பெற்றோம். 10 ஆண்டு காலம் மத்தியில் கூட்டணியில் அங்கம் வகித்தோம். இதற்கு காரணம் கூட்டணி வைக்க சொன்னது தான் என்று கூறினீர்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் நமது தலைவர் ஜி.கே. மணியை அழைத்து அதிமுக-வினர் 5 தொகுதி தான் தருவோம்  என்று கண்டிப்பாக கூறினர். பின்னர் 10 தொகுதி, அதன்ப் பின்னர் 20, 23 என பேசி வாங்கினோம்.  இதற்கு மேல் உங்களுக்கு பலம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இதில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். ஆனால் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்று சொல்லி வருகிறோம். இன்னும் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

ஒரு பாமக  மாவட்ட செயலாளர் திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்கிறார். ஒரு மாவட்ட செயலாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைகிறார். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5000 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஐம்பதாயிரம் வாக்கு கொண்ட மாவட்ட  கவுன்சிலர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது. பல இடங்களில் வேட்பாளராக நிறுத்த கூட நமக்கு ஆளில்லை என்று என்னிடம் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்று தெரிகிறதா உங்களுக்கு? மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் நாம் தமிழகத்தில் போட்டியிடவே ஆளில்லை என்று கூறும் போது நமக்கு வெட்கக்கேடு. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் விலை போய்விட்டனர். தேர்தலில் போட்டியிடாமல் திமுக, அதிமுக-வினரிடம் கூட்டு வைத்துக் கொண்டனர். இதனால் தேர்தலில் போட்டியிடவே ஆளில்லை என்கிற நிலை ஏற்பட்டு பலவீனமாகி விட்டோம் இதனால் இனிமேல் தொடர்ந்து கட்சி நடத்துவதில் அர்த்தமில்லை. கட்சி தொடங்கிய 32 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக நம்மைப் போன்று போராடியவர்கள் யாருமே இல்லை. அதாவது பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் நம்மிடம் உள்ள இளைஞர் இளம்பெண்கள் எந்த கட்சியிலும் கிடையாது.

நாம் எப்போதும் ஊடகங்களுடன் தான் கூட்டணி என்று சொல்லி வருகிறோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும். 234 சட்டமன்ற தொகுதிகளில் 60 எம்எல்ஏ தொகுதிகள் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பின்னர் நம்மைத் தேடி அனைவரும் வருவர் கூட்டணியில் இருந்த காலக்கட்டங்களில் பாமகவை  தோற்கடிக்க மற்ற கட்சியினர் பார்ப்பர். இன்று முதல் ஒவ்வொரு ஊரிலும் திண்ணை பிரச்சாரம், சமூக ஊடகங்கள் மூலமாக  பிரச்சாரம் செய்து மக்கள் கொடுக்கும் உணவை அருந்தி, அவர்கள் வீட்டில் படுத்து நூறு வாக்குகளில் நாற்பது வாக்குகளைப் பெற்று 60 எம்எல்ஏ-க்களை வெற்றி பெற வெற்றி பெற வைக்க வேண்டும். என்று ராமதாஸ் பேசினார்.

click me!