நோ சிபாரிசு..! கறார் காட்டி கடுமை காட்டும் முதலமைச்சர்..! கோட்டை சீக்ரெட்ஸ்!

By Selva KathirFirst Published Aug 17, 2021, 10:58 AM IST
Highlights

 இதுவும் கூட மற்ற அதிகார மையங்களுக்கு லேட்டாகவே தெரியவந்துள்ளது. ஸ்டாலினை பொறுத்தவரை லியோனி ஒரு ஆசிரியர் என்கிற அடிப்படையில் அந்த பதவியை அவருக்கு கொடுத்துள்ளார். கொஞ்சம் வில்லங்கமாக பேசக்கூடியவர் என்றாலும் அவரது ஆசிரியப்பணி மெச்சத்தகுந்தது என்பதையும் ஸ்டாலின் அறிந்தே வைத்திருக்கிறார். 

தமிழக அரசு தொடர்பான பதவிகளில் சிபாரிசுகளுக்கு கண்டிப்பான தடை போட்டு கோட்டையை அதிர வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் அமைச்சர் பதவிக்கு சற்றும் குறைவில்லாத வாரியத் தலைவர் பதவியை பிடிக்க என்று ஒரு கூட்டம் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் திமுகவிற்காக உழைத்தவர்கள் முதல் தேர்தல் பளப்பணியாற்றியவர்கள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள், வாய்ப்பு கிடைத்தும் தோல்வி அடைந்தவர்கள், சமூக வலைதளங்களில் திமுகவிற்காக பணியாற்றுபவர்கள், ஊடகங்களில் திமுகவின் குரலாக ஒலித்தவர்கள் என பலரும் வாரியத் தலைவர் கனவுடன் சென்னை கோட்டையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் வாரியத் தலைவர் பதவியை பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் மிக கவனத்துடன் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். அந்த வகையில் சிறுபான்மை ஆணையத் தலைவர் பதவிக்கு திமுகவை சேர்ந்த ஒருவர் மிகவும் முயற்சி செய்ததாகவும், ஸ்டாலின் வீடு வரை ஆட்களை பிடித்து காய் நகர்த்தியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்சுக்கு அந்த பதவி கிடைத்துள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகே திமுகவின் மற்ற அதிகார மையங்களுக்கு தெரியவந்துள்ளது. இதே போல் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பதவிக்கு கட்சியின் சென்னை சீனியர் ஒருவர் காய் நகர்த்தியுள்ளார்.

ஆனால் அந்த பதவியை தனது மனம் கவர்ந்த திண்டுக்கல் லியோனிக்கு ஸ்டாலின் நேரடியாக கொடுத்துள்ளார். இதுவும் கூட மற்ற அதிகார மையங்களுக்கு லேட்டாகவே தெரியவந்துள்ளது. ஸ்டாலினை பொறுத்தவரை லியோனி ஒரு ஆசிரியர் என்கிற அடிப்படையில் அந்த பதவியை அவருக்கு கொடுத்துள்ளார். கொஞ்சம் வில்லங்கமாக பேசக்கூடியவர் என்றாலும் அவரது ஆசிரியப்பணி மெச்சத்தகுந்தது என்பதையும் ஸ்டாலின் அறிந்தே வைத்திருக்கிறார். ஆனால் லியோனியை அந்த பதவியில் அமரவிடாமல் தடுக்க ஒரு அதிகார மையம் முயன்றதாக சொல்கிறார்கள்.

அந்த அதிகார மையம் தான் லியோனியின் நியமனத்தை சர்ச்சையாக்கியதாகவும் கூறுகிறார்கள். இதனால் தான் அவர் உடனடியாக பதவி ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ஸ்டாலின் லியோனிக்கு தான் அந்த பதவி என உறுதியுடன் கூறியதை தொடர்ந்து அவர் பொறுப்பேற்றார். இந்த நிலையில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகியுள்ளார் வாகை சந்திரசேகர்.  இவர் கலைஞர் ஆட்சி முதலே ஸ்டாலின் விசுவாசி. அந்த அடிப்படையில் கடந்த முறை வேளச்சேரியில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனார். இந்த முறை அமைச்சர் கனவில் இருந்த வாகை சந்திரசேகரை லோக்கல் பாலிடிக்ஸ் காலி செய்துவிட அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் வாகை சந்திரசேகரே எதிர்பார்க்காத வகையில் அவரை நேரில் அழைத்து பதவியை கொடுத்து மகிழ்ந்துள்ளார் ஸ்டாலின். பொதுவாக இது போன்ற பதவிகளை வழங்கும் போது கலைஞர் தனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதித்து முடிவெடுப்பார் என்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் தன்னிச்சையாக தனது மனதிற்கு நெருக்கமானவர்களை அழைத்து தற்போத பதவிகளை கொடுத்து வருவதாகவும், மிகவும் கறாராக பதவி விஷயங்களில் சிபாரிசை தட்டிக் கழித்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

click me!