எஸ்.பி. வேலுமணி திடீர் தனி ஆவர்த்தனம்..! கொங்கு மண்டல அதிமுகவில் குஸ்தி..!

By Selva KathirFirst Published Aug 17, 2021, 10:50 AM IST
Highlights

கொங்கு மண்டலத்தை சேர்ந்த தங்கமணி, செங்கோட்டையன் போன்றோர் ரெய்டின் போது அமைதியாக இருந்ததும் வேலுமணியை டென்சன் ஆக்கியதாக சொல்கிறார்கள். தனது வீட்டில் ரெய்டு என்றதும் அதிமுகவில் எடப்பாடி தொடங்கி அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்திருக்க வேண்டும் என்று வேலுமணி எதிர்பார்த்ததாக சொல்கிறார்கள்.

திடீரென கோவை விமான நிலையத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டி எஸ்பி வேலுமணி தனது பலத்தை காட்டியதை அந்த கட்சியின் சீனியர் தலைவர்களே விரும்பவில்லை என்கிறார்கள்.

கடந்த வாரம் செவ்வாய் கிழமை எஸ்பி வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். ஒரே நாளில் சோதனை முடிந்தாலும் கடந்த ஒரு வாரத்தில் எஸ்பி வேலுமணிக்கு நெருக்கமாக இருந்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை தற்போது லஞ்ச ஒழிப்புப் போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். சோதனை நடந்து முடிந்த மறுநாள் திருச்செந்தூர் சென்று திரும்பிய வேலுமணி சுமார் இரண்டு நாட்கள் வரை சென்னையில் தங்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து கோவை சென்ற அவரை வரவேற்க விமான நிலையத்தில் பெருங்கூட்டம் காத்திருந்தது. கிட்டத்தட்ட ஒரு மினி மாநாட்டிற்கு தேவைப்படும் அளவிற்கு விமான நிலையத்தில் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என அனைவரும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். இது தவிர கிளைச் செயலாளர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் விமான நிலையம் வந்திருந்தனர். சென்னையில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே கோவையில் உள்ள வேலுமணி வீட்டின் முன்பும் பெரும் கூட்டம் கூடியிருந்தது.

சோதனை முடிந்த மறுநாள் வேலுமணியை சந்திக்க கோவையில் இருந்து ஒரு கூட்டம் சென்னை புறப்பட தயாரானது. ஆனால் சென்னை வர வேண்டாம் கோவையில் வரவேற்பை பிரமாண்டமாக்க கூட்டத்தை கூட்டுங்கள் என வேலுமணி தரப்பிடம் இருந்து உத்தரவு வந்தது- இதனை அடுத்து சுமார் இரண்டு நாட்கள் அதிமுக நிர்வாகிகள் இரவு பகலாக பணியாற்றி பெரும் கூட்டத்தை கூட்டிக் கொண்டு விமான நிலையம் வந்திருந்தனர். வேலுமணி இப்படி பெருங்கூட்டத்தை கூட்டக்காரணம் அதிமுக தலைமை அவரை கைவிட்டது தான் என்கிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருப்பது வேலுமணியின் தனிப்பட்ட விவகாரம் இதற்காக அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதும் என்று அதிமுக மேலிடம் ஒதுங்கிக் கொண்டது. வேலுமணியை சந்திக்க எம்எல்ஏ ஹாஸ்டல் வந்த முன்னாள் அமைச்சர்களும் செய்தியாளர்களை சந்திக்காமலேயே சென்றுவிட்டனர். இதே போல் எடப்பாடி பழனிசாமியும் வேலுமணி வீட்டில் நடைபெற்ற ரெய்டின் போது பெரிய அளவில் ரியாக்சன் காட்டவில்லை என்கிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை முன்னாள் அமைச்சர்கள் தாங்களாகவே எதிர்கொள்ள வேண்டும், கட்சி இதில் பெரிய அளவில் தலையிடாது என்று எடுத்த முடிவு தான் அதற்கு காரணம் என்கிறார்கள்.

இது வேலுமணிக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள். மேலும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தங்கமணி, செங்கோட்டையன் போன்றோர் ரெய்டின் போது அமைதியாக இருந்ததும் வேலுமணியை டென்சன் ஆக்கியதாக சொல்கிறார்கள். தனது வீட்டில் ரெய்டு என்றதும் அதிமுகவில் எடப்பாடி தொடங்கி அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்திருக்க வேண்டும் என்று வேலுமணி எதிர்பார்த்ததாக சொல்கிறார்கள்.

இது நடக்கவில்லை என்பதால் ஏற்பட்ட அதிருப்தியில் தான் தனது செல்வாக்கை எடப்பாடிக்கும் கட்சித் தலைமைக்கும் காட்ட வேலுமணி பெருங்கூட்டத்தை கூட்டியதாக சொல்கிறார்கள். வேலுமணியை வரவேற்க திரண்டவர்கள் வெறும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இல்லை என்கிறார்கள். நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர் வரை வேலுமணியின் ஆதரவாளர்கள் இருப்பதாகவும் அவர்களும் கோவையில் கூடியதாகவும் சொல்கிறார்கள்.

click me!