என்னை சந்திக்க யாரும் முயற்சிக்கக் கூடாது... திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!

Published : May 19, 2021, 08:34 PM IST
என்னை சந்திக்க யாரும் முயற்சிக்கக் கூடாது... திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!

சுருக்கம்

கொரோனா ஆய்வுப் பணிகளுக்கு செல்லும் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இரு வாரங்கள் ஆக உள்ளன. இந்நிலையில் சென்னையிலேயே  தங்கி கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் தினந்தோறும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்பாக வெவ்வேறு மாவட்டங்களுகும் சென்று ஆய்வுப் பணிகளை நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். 
இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை நாளை (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன். இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் கழக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.


எனவே, கழக உடன்பிறப்புகள் நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும். இந்தப் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் கழக கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
கழக உடன்பிறப்புகளான உங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும் - பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை கழகத்தினர் தவறாது கடைபிடித்திட வேண்டுகிறேன்” அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!