அரசுப் பள்ளிகள்தானே என்று யாரும் தாழ்வாக எண்ணிவிடக்கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் உருக்கம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 2:45 PM IST
Highlights

அரசுப்பள்ளி தானே என யாரும் தாழ்வாக எண்ணிவிடக்கூடாது, அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்றார். ஒவ்வொரு அரசு பள்ளியையும் மேம்படுத்த முதல்வர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்,

அரசுப் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசுப்பள்ளி தானே என்று யாரும் தாழ்வாக எண்ணிவிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில்,  நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனியார் அறக்கட்டளை சார்பாக செயல்வழிக்கற்றல் முறை திட்டம், மழலையர் வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் விழா மேடையில் உரையாற்றிய அவர், அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம், தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் கிடையாது, ஆனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மழலையர் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளிகளை நாடும் நிலைமை உள்ளது. எனவே அந்த நிலைமையை மாற்றும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. எனவே அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி தானே என யாரும் தாழ்வாக எண்ணிவிடக்கூடாது, அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வரவேண்டும் என்றார். ஒவ்வொரு அரசு பள்ளியையும் மேம்படுத்த முதல்வர் வேகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார், அவருடன் சேர்ந்து நாங்களும் வேகமாக ஓட வேண்டியுள்ளது என கூறினார். அதேபோல் " இல்லம் தேடி கல்வி"  திட்டத்திற்காக தற்போது வரை 60, 400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்றும், இளைஞர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்ய முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் எனும் வகையில் மாற்றிக் காட்ட உழைத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார். 
 

click me!