அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது..! எடப்பாடியாருக்கு ஓபிஎஸ் கொடுத்த வார்னிங்..!

By Selva KathirFirst Published Jul 29, 2021, 10:54 AM IST
Highlights

திடீரென ஓபிஎஸ் கட்சியை யாராலும் கைப்பற்ற முடியாது என்று கூறியதுடன், இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்த உள்ளதாக கூறியுள்ளார். ஓபிஎஸ்சின் இந்த பேட்டி, கட்சியின் அதிகாரம் கொண்ட பதவியை கைப்பற்றி கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிடும் இபிஎஸ் தரப்புக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

திமுக அரசுக்கு எதிராக தமிழகத்திலேயே முதல் ஆளாக அதிமுக சார்பில் போராட்டத்தில் இறங்கிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அதன் பிறகு செய்தியாளர்களையும் சந்தித்து முக்கியமான சில விஷயங்களையும் பேசிவிட்டு சென்றார்.

தேர்தல் சமயத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் வேறு எங்கும் போராட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே போடியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திரண்டார். மைக் செட் சகிதமாக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவர், அங்கு இருந்த மைக் முன்பும் தோன்றி பேசினார். மேலும் திமுக அரசுக்கு எதிராக தானே தலைமையேற்று ஓபிஎஸ் முழக்கங்களையும் எழுப்பினார்.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அங்கு சென்ற செய்தியாளர்களிடம் முதலில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதிமுகவை கைப்பற்ற உள்ளதாக சசிகலா கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், அதிகாரம் கொண்ட அதிமுக பொதுக்குழு தான் சசிகலாவிடம் இருந்து பொறுப்புகளை பறித்துள்ளது. எனவே யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. ஒரு குடும்பம் கட்சியை வழிநடத்துவதை ஏற்க இயலாது. நானும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கட்சியை நான்கரை ஆண்டுகளாக வழி நடத்தி வருகிறோம். என்று பதில் அளித்தார் ஓபிஎஸ்.

கேள்வி சசிகலாவிற்காக இருந்தாலும் பதில் இபிஎஸ்சுக்கும் சேர்த்து தான் என்பது போல் இருந்தது ஓபிஎஸ்சின் பதில். சசிகலா தொடர்புடைய கேள்விக்கு ஓபிஎஸ் பதில் அளித்த போதும், நானும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கட்சியை வழிநடத்துகிறோம் என்பதை அழுத்தமாக கூறியிருந்தார். இதன் மூலம் இருவரும் இணைந்து தான் இனியும் கட்சியை வழிநடத்துவோம் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனிடையே இதன் பின்னணி குறித்து விசாரித்த போது, அதிமுக உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டிய நெருக்கடி உள்ளது.

அப்போது கிளைச் செயலாளர் முதல் அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுச் செயலாளர் பதவி வரை தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். இந்த சமயத்தில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது என்று இபிஎஸ் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டி குறிப்பிட்ட சில வருடங்கள் வரை பொதுச் செயலாளர் பதவி இல்லாமல் கட்சியை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுதல் குழு மூலம் நடத்தலாம் என்று தீர்மானம் நிறைவேற்ற ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இந்த சூழலில் தான் திடீரென ஓபிஎஸ் கட்சியை யாராலும் கைப்பற்ற முடியாது என்று கூறியதுடன், இருவரும் இணைந்து கட்சியை வழிநடத்த உள்ளதாக கூறியுள்ளார். ஓபிஎஸ்சின் இந்த பேட்டி, கட்சியின் அதிகாரம் கொண்ட பதவியை கைப்பற்றி கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிடும் இபிஎஸ் தரப்புக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

click me!