எந்த முயற்சி செய்தாலும் அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது.. சசிகலாவுக்கு எதிராக எகிறிய ஓபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Jul 28, 2021, 11:42 AM IST
Highlights

அதிகாரமுள்ள அதிமுக பொதுக்குழுதான் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. அதிமுகவை பொறுத்த வரை தனிப்பட்ட நபரோ குடும்பமோ கட்சியை வழிநடத்த முடியாத ஜனநாயக கட்சியாக திகழ்கிறது.

அதிமுகவை பொறுத்த வரை தனிப்பட்ட நபரோ குடும்பமோ கட்சியை வழிநடத்த முடியாத ஜனநாயக கட்சியாக திகழ்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக சார்பாக தமிழ்நாடு முழுவதும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேனியில் தொண்டர்களுடன் தனது இல்லத்தின் முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்;- தமிழகத்தில் தற்போதுள்ள திமுக அரசு மக்களுக்கு பயன்படாத அரசாக உள்ளது. அதிமுக ஆட்சியில் கல்வி, சமூக பொருளாதாரம் மற்றும் சட்டம், ஒழுங்கில் முன்னிலையில் இருந்தது. 10 ஆண்டுகள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தது அதிமுக அரசு.  

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாக திமுக திகழ்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் முதல் கடைநிலை பேச்சாளர்கள் வரை பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தேர்தல் முடிவில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 3 சதவீதம் மட்டுமே. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் விரோத அரசாகவே திகழ்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியதில்  அதிமுக அரசே சிறந்த அரசாக விளங்கியது. 

அதிகாரமுள்ள அதிமுக பொதுக்குழுதான் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது. அதிமுகவை பொறுத்த வரை தனிப்பட்ட நபரோ குடும்பமோ கட்சியை வழிநடத்த முடியாத ஜனநாயக கட்சியாக திகழ்கிறது. நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருகிறோம். காவிரியின் முழு உரிமையையும் பெற்ற அரசு அதிமுக அரசு. யாரும் உரிமை கொண்டாட முடியாது. மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை. அதை பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

click me!