எத்தனை சோதனை நடத்தினாலும் ஒன்னும் பண்ணமுடியாது.. மீண்டு வருவோம்.. கெத்து காட்டும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 9:50 AM IST
Highlights

பூனை கண் மூடி விட்டால் உலகமே இருண்டு விட்டது என்பது போல திமுக நினைக்கிறது, ஆனால் எத்தனை விதமான பழிவாங்கும் நோக்கத்தில் சோதனைகள் நடத்தினாலும், அதையெல்லாம் அதிமுக கடந்து முன்னேறி வரும் என்றார்.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். எத்தனை சோதனைகளை ஏவினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்று அவர் கூறியுள்ளார். அறப்போர் இயக்கம் வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை பட்டினபாக்கம் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி திட்டமிட்டு இந்த சோதனை நடைபெறுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

அதிமுகவை பழிவாங்கும் நோக்கில் திமுக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் அதையெல்லாம் கடந்து அதிமுக முன்னேறி வரும் என்று அவர் கூறியுள்ளார். வேண்டுமென்றே கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும், கட்சியை முடக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்தவும் இந்த சோதனையை திமுக நடத்துகிறது என்றார். பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு விட்டது என்பது போல திமுக நினைக்கிறது, ஆனால் எத்தனை விதமான பழிவாங்கும் நோக்கத்தில் சோதனைகள் நடத்தினாலும், அதையெல்லாம் அதிமுக கடந்து முன்னேறி வரும் என்றார். தற்போது நடப்பது மன்னர் ஆட்சி அல்ல இது ஜனநாயக நாடு ஜனநாயக நாட்டில் நீதிமன்றம் என்று ஒன்று உள்ளது. நீதியை நிலைநாட்டும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதிலிருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் வருவார் என கூறினார். 
 

click me!