கோடிகளில் சொத்து சேர்த்த கே.சி வீரமணி.. தொக்கா சிக்கிய சம்பவம்.. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் பகீர் பின்னணி.

Published : Sep 16, 2021, 09:21 AM IST
கோடிகளில் சொத்து சேர்த்த கே.சி வீரமணி.. தொக்கா சிக்கிய சம்பவம்.. லஞ்ச ஒழிப்புத்துறை  ரெய்டில் பகீர் பின்னணி.

சுருக்கம்

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். 

அறப்போர் இயக்கம் வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அலுவலர்கள் என மொத்தம் 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி  வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016 -2021ஆம் ஆண்டு காலத்தில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி வீரமணி இவர் மீது அறப்போர் இயக்கம் சமீபத்தில் புகார்  ஒன்று அளித்தது. அதில்  2011 முதல் 2021 வரையில் பொது ஊழியராகவும், சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என சில ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்துள்ளது. 

2016 முதல் 2021 வரையில் வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தார், முன்னதாக 2013 முதல் 2016 வரை பள்ளி கல்வித்துறை, விளையாட்டு, தமிழ் மொழி கலாச்சாரம் மற்றும் சுகாதாரத் துறை போன்ற துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். 2011 ஆம் ஆண்டு கே. சி வீரமணி மற்றும் அவரது குடும்பத்திற்கான நிகர சொத்து மதிப்பு 7.48 கோடி ரூபாய்தான், ஆனால் 2011 முதல் 2021 வரை அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் சேர்த்த சொத்து மதிப்பு 91.2 கோடி ரூபாய், 2011 முதல் 2013 வரையில் அவர் வாங்கிய கடன்களை கழித்தால் அவர் சேர்த்த நிகர சொத்து 83.75 கோடி ரூபாய் என்றும் அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. அதேபோல் ஓசூர் சிப்காட்டில் 0.1 ஏக்கர் நிலம் வருடத்திற்கு வெறும் 1 ரூபாய் குத்தகை என்ற அடிப்படையில் வீரமணிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

அந்த நிலத்தில் 15 கோடி ரூபாய் செலவில் ஹோட்டல் ஹோசூர் ஹில்ஸ் கட்டப்பட்டுள்ளது, இப்படி பல்வேறு புகார்களின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் கலக்கத்தில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!