எத்தனை கோடி கொட்டினாலும் யாரை இணைத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் தாமரை மலரவே மலராது... சிபிஎம் சாபம்..!

By Asianet TamilFirst Published Jan 29, 2021, 10:02 PM IST
Highlights

எத்தனை கோடிகள் கொட்டினாலும் எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் - புதுச்சேரியில் தாமரை ஒருபோதும் மலராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், “புதுச்சேரியில் கடந்த நான்கரை ஆண்டுகாளக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டு புதுச்சேரி அரசை மத்திய பாஜக அரசு முடக்கியுள்ளது. இதே நிலைதான் கேரள இடது முன்னணி அரசுக்கும் ஏற்பட்டது. அதனால், அந்த அரசு மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து அதையெல்லாம் எதிர்த்து வந்தது. அதன் காரணமாகத்தான் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் பேராதரவு கிடைத்தது.
புதுச்சேரியில் ஐந்தாண்டு காலம் இலவச அரிசி திட்டம் நிறுத்தம், நியாயவிலைக் கடைகள் மூடு விழா எனப் பல மக்கள் நலத்திட்டங்கள் ஓர் ஆளுநரால் முடக்கப்பட்டுள்ளன. பாஜகவின் ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் நமக்கெல்லாம் எழுந்துள்ளது. எனவே, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அனைவரையும் வருகிற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும். நாட்டில் 23 அத்தியாவசியப் பண்டங்களைப் பதுக்கக் கூடாது என்று உள்ளது. ஆனால், புதிய வேளாண் சட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பதுக்கலை நியாயப்படுத்தும் வகையில் சேமிப்பு என்று மாற்றப்பட்டுள்ளது.
நாட்டில் தானியங்களின் பற்றாக்குறை ஏற்படும்போது விலையைத் தானாகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் உயர்த்திவிடுவார்கள். ஒரு கிலோ 200 ரூபாய் கொடுத்து அரிசி வாங்கக்கூடிய அவலம்கூட ஏற்படும். இந்தச் சட்டத்தை அதிமுக அரசு தடுத்திருந்தால், இது அமலுக்கு வந்திருக்காது. அதற்கான முழுக் காரணத்தை அதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். பாஜக பல மாநிலங்களில் மக்கள் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வி அடைந்தன. அதனால்தான் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள்.


எத்தனை கோடிகள் கொட்டினாலும் எத்தனை சாமிகளை விலை கொடுத்து வாங்கினாலும், இணைத்தாலும் தமிழகம் - புதுச்சேரியில் தாமரை ஒருபோதும் மலராது. வரும் சட்டப்பேரவைப் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மக்களுடைய பேராதரவைப் பெற்று தமிழகம் புதுச்சேரியில் ஆட்சியமைப்பது உறுதி” என்று கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
 

click me!