
போக்குவரத்துத் தொழிலாள்கள் வேலை நிறுத்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கமுடியாது என அதிரடியாக அறிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் , தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு செல்ல வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு பேருந்து ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தால் பொது மக்கள் மிகுந்த பாதிப்படைவதால் இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 நாட்களுக்கு முன்பு தடை விதித்தனர். ஆனால் இந்த தடையை மீறி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையின் போது சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதில் மனுவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நோட்டீஸ் தந்த பிறகே வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என்று சிஐடியு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்கள் நலனில் அரசு முழுமையாக அக்கறை செலுத்தவில்லை என்றும் தொழிற்சங்கம் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் தொரிலுளர்கள் தற்போது நடத்தி வரும் போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உயர்நிதிமன்ற நீதிபதிகள், போக்குவரத்துத் தொழிலாள்கள் வேலை நிறுத்தம் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கமுடியாது என அதிரடியாக அறிவித்தனர். மேலும் , தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.