340 கோடி ரூபாய் செலுத்தினால் மட்டுமே 'தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீரை வழங்க முடியும் என ஆந்திர அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் தமிழக பொதுப் பணித்துறையினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆண்டு தோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நதி நீரை, ஆந்திர அரசு வழங்கும் வகையில், இரு மாநிலங்களுக்கு இடையே, கடந்த 1983 ஆம் ஆண்டு எம்ஜிஆர் – என்டிஆர் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்திப்படி , கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர், தமிழகத்திற்கு வருவதற்காக, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்பட்டு, சென்னையின் குடிநீர் தேவைக்காக, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கால்வாயை, ஸ்ரீசத்யசாய் அறக்கட்டளை புனரமைத்து தந்த பின்னரே, தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் எடுத்து வர வழிவகை செய்யப்பட்டது.
அதற்கு முன் வரை, தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் கிடைப்பதில், சிக்கல் நீடித்து வந்தது. அதனால், கிருஷ்ணா நீர் வரும் கால்வாயை, சாய்கங்கை கால்வாய் என்று, பொதுப்பணிதுறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
சாய்கங்கை கால்வாயின் பராமரிப்பு செலவை, ஆந்திரா - தமிழகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என, ஒப்பந்த விதி உள்ளது. இதற்காக, தமிழக அரசு தரப்பில், ஆந்திர அரசிடம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த கால்வாயில், பல்வேறு பாசன விரிவாக்க பணிகளை செய்து, அதற்கும் ஆந்திர அரசு, தமிழக அரசிடம் பணம் கேட்டு வருகிறது.
தமிழக – ஆந்திர மாநிலங்களுக்கு இடையே போட்ட ஒப்பந்தப்படி வரும் ஜூலை முதல், அக்டோபர் வரை, 8 டி.எம்.சி., நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்தநீர் கிடைத்தால், வறட்சியில் தவிக்கும், சென்னையின் குடிநீர் தேவையை ஒருளவுக்கு சமாளிக்க முடியும்.
ஆனால் கால்வாய் பராமரிப்புச் செலவாக ஆந்திர அரசு செலவு செய்த 340 கோடி ரூபாயை தமிழக அரசு கொடுத்தால் மட்டுமே கிருஷ்ணா நதி நீரை வழங்க முடியும் என அம்மாநில பொதுப் பணித்துறை அதிகாரிகள் கறாராக சொல்லி விட்டனர்.