பாஜகவை வீழ்த்த திட்டம் வகுக்கும் மம்தா பானர்ஜி... இடதுசாரிகள், காங்கிரஸை உதவிக்கு அழைக்கிறார்!

By Asianet TamilFirst Published Jun 27, 2019, 7:15 AM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று திரினாமூல் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. மாறாக, இடதுசாரிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 
 

மேற்கு வங்காளத்தில் முன்னேறி வந்துகொண்டிருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சி நடத்திவந்த இடதுசாரிகளின் ஆட்சியை வீழ்த்திய பெருமை மம்தா பானர்ஜிக்கு உண்டு. 2011-ல் மேற்கு வங்க முதல்வராக ஆன மம்தா பானர்ஜி, 2016 தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதல்வரானார். மம்தாவின் வளர்ச்சிக்கு பிறகு இடதுசாரிகளின் வாக்கு வங்கி கரைய ஆரம்பித்தது.


அதே வேளையில் மேற்கு வங்காளத்தில் எங்கே இருக்கிறது என தேட வேண்டிய நிலையில் இருந்த பாஜகவும் துளிர்விட ஆரம்பித்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 2 இடங்களில் வெற்றி பெற்று மேற்கு வங்காளத்தில் தன் கணக்கைத் தொடங்கியது பாஜக. இடதுசாரிகளையும் தாண்டி தற்போது மேற்கு வங்காளத்தில் பாஜக வளர்ச்சி பெற்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி மேற்கு வங்காளத்தில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று திரினாமூல் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. மாறாக, இடதுசாரிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

 
மேற்கு வங்காளத்தில் பாஜகவின் இந்த முன்னேற்றம் மம்தா பானர்ஜியைப் பதற்றப்பட வைத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது ‘ஜெய்ஸ்ரீராம்’ என பாஜகவினர் எழுப்பிய கோஷத்தால் கோபமடைந்த மம்தாவை, அந்த கோஷத்தை எழுப்பியே இன்னும் எரிச்சலூட்டிவருகிறார்கள் பாஜகவினர். முன்பு இடதுசாரிகள் - திரினாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதிக்கொண்டதைப்போல இப்போது திரினாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. 
2021-ல் மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மம்தாவை வீழ்த்த பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது. மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் கவனம் செலுத்துங்கள் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தொண்டர்களுக்கு அண்மையில் அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில் பாஜகவை வீழ்த்த பரம எதிரியான இடதுசாரிகளுக்கும் காங்கிரஸுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இதைப் பற்றி மம்தா பானர்ஜி மேற்குவங்க சட்டப்பேரவையில் பேசும்போது, “பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எல்லா கட்சிகளும் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய அணியை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மம்தாவின் இந்த அழைப்பு மேற்கு வங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை. மேற்கு வங்காளத்தில் பாஜகவின் செல்வாக்கை தடுக்க இக்கட்சிகள் இணைந்து செயல்படுமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

click me!