எந்த மாநில முதல்வருக்கும் உதிக்காத யோசனை..!! எடப்பாடியாரை கையெடுத்து கும்பிட்டு கண்கலங்கிய மாணவர்கள்..

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2020, 3:59 PM IST
Highlights

 முதலமைச்சர் அவர்களின் கரங்களால் கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் இந்த நல்ல திட்டத்திற்கு மாணவ மாணவியர் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர். 

2020-21 ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கைக்கான  கலந்தாய்வினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவுக்கிணங்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கப்பட்டுள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதை பார்வையிட்டார். 

2020-21 ஆம் ஆண்டிற்கான அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ சேர்க்கைக்காக கடந்த 16ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு காலை 9 மணி அளவில் தொடங்கப்பட்டது, முதலமைச்சர் அவர்களின் சிந்தனையில் உதித்த திட்டம் இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத ஒன்று, மருத்துவ இளங்கலை படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான வரலாற்று சிறப்புமிக்க திட்டம். இத்திட்டத்தின் கீழ் இன்று 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு கலந்தாய்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதற்கான விரிவான ஏற்பாடுகளை மக்கள் நலவாழ்வு துறையும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து சிறப்பாக  மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்புக் குழு, ஆலோசனை வழங்கும் குழு, சான்றிதழ் சரிபார்ப்பு குழு மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் சான்றிதழ் வழங்குவதற்காக குழு போன்ற பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மேலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கலந்தாய்வின் போதே மாணவர்களின் இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மதிப்பெண் சான்று போன்ற அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரிய எல்சிடி திரையில் ரேங்க் பட்டியலை அவர்கள் பார்த்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும். தாய் அல்லது தந்தை தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று வைத்திருக்க வேண்டும், போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இதுபோன்ற விதிமுறைகளைப் பின்பற்றி சான்றிதழ்களை சரிபார்த்து எந்த ஒரு சந்தேகத்திற்குமிடமளிக்காமல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதற்காகவே இந்த கோவிட் காலத்திலும் பொது சுகாதாரத் துறை உரிய நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் இந்த ஆண்டு ஆப்லைன் என்றால் நேரடி முறையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது. 

 

மேலும் இன்று பிற்பகல் முதலமைச்சர் அவர்களின் கரங்களால் கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ சேர்க்கைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது. முதலமைச்சரின் இந்த நல்ல திட்டத்திற்கு மாணவ மாணவியர் அவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தினை அளித்த முதலமைச்சர் அவர்களுக்கு மக்கள் நலவாழ்வு துறை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது இவ்வாறு அமைச்சர் கூறினார். என தெரிவிக்கப்பட்டள்ளது. 

 

click me!