தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடையாது !! அடித்துச் சொன்ன மத்திய அரசு !!

By Selvanayagam PFirst Published Jul 16, 2019, 8:16 AM IST
Highlights

மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியாது' என, மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாஜக அரசு வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அடைத்த பிறகு தற்போது நாடாளுமன்ற  கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மக்களவையில்  கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், எழுத்து மூலம் அளித்துள்ள பதில்: மருத்துவக் கல்வி,
மருத்துவ கல்விக்காக தேசிய அளவில் நடத்தப்படும், 'நீட்' நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், நாடு முழுவதும், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அதன்படியே, நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த சட்டம், நாடு முழுவதற்குமானது; அதில் எந்த விலக்கும் அளிக்க முடியாது. அதனால், நீட் நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு எந்த விலக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாடுகளில் வழங்கப்படும், ஒரு ஆண்டு முதுநிலை பட்டப் படிப்புகளை அங்கீகரிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. அதே நேரத்தில், சில நாடுகளில் நடைமுறையிலுள்ள பட்டப் படிப்புகள், நாம் அங்கீகாரம் அளித்துள்ள பட்டப் படிப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளன. 

இது போன்ற பட்டப் படிப்புகளை அங்கீகரிப்பது குறித்து ஆராய, குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் படி, இது போன்ற நாடுகளுடன் பேசவுள்ளோம் என அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில்  நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த தீர்மானத்தை அவர் நிராகரித்துள்ளதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!