பிரேமலதா போடும் உள்ளாட்சித் தேர்தல் கணக்கு... அதிமுக - தேமுதிக கூட்டணியில் அடுத்து என்ன.?

By Asianet TamilFirst Published Jul 16, 2019, 6:52 AM IST
Highlights

அதிமுகவுடன் தேமுதிக இணக்கமாக இருக்கவே பிரேமலதா விரும்புகிறார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில்  போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றும் பிரேமலதா முனைப்பு காட்டிவருகிறார். 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்பட அறிவித்துள்ள அதிமுக அதற்கு விரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு இணையாக சீட்டு வழங்க வேண்டும் என்று அதிமுகவை தேமுதிக தலைமை கடும் நெருக்கடி கொடுத்தது. இறுதியில் 4 சீட்டுகளுக்கு ஒத்துக்கொண்டு தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைந்தது. ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதியைத் தவிர்த்து, தேமுதிகவுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத தொகுதிகளை அதிமுக வழங்கியது. 4 தொகுதிகளிலும் தேமுதிக  தோல்வியடைந்தது. அதிமுக கூட்டணியில் இருந்தபோதும் திருச்சியில் தேமுதிக டெபாசிட் பறிபோனது.


இதன் காரணமாக அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வர வேண்டும் என்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்கள். இதை வெளிப்படையாக வலிறுத்தி தீர்மானம் போட்ட கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் டி.ஜெகநாதன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுகவில் ஐக்கியமாகிவிட்டார்.
மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுன் கூட்டணி தொடரும்” என்று உறுதிபட கூறிவிட்டார். மேலும் வேலூரில் தேர்தல் பிரசாரம் செய்யவும் பிரேமலதா முடிவு செய்துள்ள நிலையில், வேலூருக்கு விஜயகாந்தை அழைக்கும் முடிவிலும் இருக்கிறார். அதிமுகவுடன் தேமுதிக இணக்கமாக இருக்கவே பிரேமலதா விரும்புகிறார். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில்  போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றும் பிரேமலதா முனைப்பு காட்டிவருகிறார். தற்போதைய நிலையில், தனித்து போட்டியிட்டால், தேமுதிகவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால், அதிமுக கூட்டணியை பிரேமலதா விரும்புவதாகவும் அக்கட்சியினரே தெரிவிக்கிறார்கள். 
ஆனால், தேமுதிக கூட்டணி விஷயத்தில் அதிமுக வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. என்றாலும் தேர்தல் எதுவும் தற்போது இல்லாத நிலையில் அதைப் பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது கூட்டணி குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் அதிமுக இருப்பதாகவும் தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது அதிமுக கூட்டணி நிலவரம் தெரியவரும் என்பது யதார்த்தம்.

click me!