கன்னியாகுமரி, கோவை தொகுதிகள் உங்களுக்குத்தான் …. ஆனால் கூட்டணி மட்டும் வேண்டாம் !! பாஜகவை அதிர வைத்த எடப்பாடி !!

By Selvanayagam PFirst Published Jan 27, 2019, 8:54 AM IST
Highlights

பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக அமைச்சர்கள் சிலர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்றும் கன்னியாகுமரி  மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளர்களை  நிறுத்தாது என்றும் தேர்தலுக்குப் பிறகு ஆதரவு அளிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி  பாஜக தலைவர்களிடம் சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.  தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது. அதேபோல், அனைத்து கட்சிகளும், தேர்தலில் வெற்றி  பெறுவதற்காக, பலமான கூட்டணியை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளன..

மோதல், அதிருப்திகளை புறந்தள்ளி, வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொண்டு  அனைத்து கட்சி தலைவர்களும், ஒவ்வொரு கட்சியுடனும், ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. இதில், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள், கம்யூ னிஸ்ட்கள், முஸ்லிம் லீக் உட்பட, பல கட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளது.

இக்கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என அமைச்சர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அதே போல் பாஜகவையும்,  மத்திய அரசையும்  நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்து  பேசி வருகிறார்.

.
மேலும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்கு பின், அமைச்சர்களிடம் தனியாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, பாஜக கூட்டணியால் ஏற்படும் நன்மைகளை விளக்கி உள்ளார்.

ஆனால் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஓபிஎஸ் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தவிர மற்ற அமைச்சர்களும், எம்.பி.க்களும் பாஜக கூட்டணியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். முக்கியமாக  சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் பாஜக கூட்டணிக்கு எதிராகவே பேசி வருகின்றனர்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் நாம் அவர்களுக்கு அடிமைகள் போல் இருக்க வேண்டும் என அதிமுக எம்.பி.க்களும் கூறி வருகின்றனர், கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்புவதால்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரண்டு போயுள்ளார்.

இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதே நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் பாஜக போட்டியிடும் பட்சத்தில் அந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடாமல் அதன் வெற்றிக்கு பாடுபடுவது என்றும், தேர்லுக்குப் பிறகு பாஜகவுக்கு முழு ஆதரவு அளிப்பது என்றும் எடப்பாடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!