என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முறையான வேலை கொடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…

First Published Nov 2, 2017, 8:15 AM IST
Highlights
NLC should provide proper employment to the land owners - G.k.Vasan emphasis on ...


கடலூர்

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்துள்ள குடும்பங்களுக்கு முறையான வேலை கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “அதிமுக ஆட்சி மக்களின் நிலையை பிரதிபலிக்கத் தவறிய அரசாக செயல்படுகிறது. கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பிரச்சனையை முழுமையாக கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைநீரைச் சேமிக்க தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையினால் தெருக்களில் தண்ணீர் வெள்ளமாக தேங்கி வீடுகளுக்குள் புகுந்து வரும் நிலை உருவாகியுள்ளது.

சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்றதாக மாறியுள்ளது. இந்த நிலையை தமிழக அரசு மாற்ற வேண்டும்.

விவசாயிகளின் கடன் வசூலை மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியால் நீண்ட கால நன்மை என மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் எல்லா எதிர்கட்சிகளும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. மக்களுக்கும், வணிகர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள்தான் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய துறைகளில் வரி குறைப்பு செய்ய வேண்டி உள்ளது.

தமிழகத்தில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறது. இப்பிரச்சனையைத் தீர்க்க கடுமையான சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்துள்ள குடும்பங்களுக்கு முறையான வேலை கொடுக்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

click me!