பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்தார். 2024 தேர்தலில் களம் கண்டு மீண்டும் பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது
இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு ஷாக்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஷாக் கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முயன்று வருகிறது. இதனை தடுக்க நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்தக் கூட்டணியை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் தான் நிதிஷ்குமார். இந்தநிலையில் இந்தக் கூட்டணியில் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என தனது ஆதரவாளர்கள் மூலம் வலியுறுத்தி வந்தார்.இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நிதிஷ் குமார் பெயரை மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி முன்மொழிந்தார்.
அதிருப்தியில் நிதிஷ்குமார்:
இதற்கு லாலு பிரசாத் யாதவ் மற்றும் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கேட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதனால் நிதிஷ்குமார் கடும் அதிருப்தி அடைந்தார். மேலும் இந்தியா கூட்டணியில் எந்த வித பதவியும் வேண்டாம் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பீகாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது.
பாஜகவுடன் கூட்டணி:
இதனால் பீகாரில் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து லாலு கட்சியுடன் மோதலை தொடர்ந்தார். இந்தநிலையில் இன்று தனது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது அல்லது மீண்டும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு நிதிஷ் குமார் தயாராகிவிட்டார். இதன் காரணமாக இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நான்காவது முறை கூட்டணி மாறுகிறார் நிதிஷ் குமார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தயாராகிவிட்டார். பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரியா ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்து இருந்த நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைகிறார். … pic.twitter.com/aCzkasyNaC
— Asianetnews Tamil (@AsianetNewsTM)