உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகள் குறைப்பு ! சலுகைகளை வாரி வழங்கிய நிதி அமைச்சர் !!

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 8:17 PM IST
Highlights

புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்கப் படும் என்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்றபோது நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் நியமிக்கப்பட்டார். முதன் முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பதவி ஏற்றபிறகு இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. ஜிடிபி 5 சதவீதத்துக்கு குறைந்தது. 

இதனால் இந்தியாவில் மோட்டார் வாகனத் தொழில், சிறுகுற தொழில் போன்றவை நசிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பெரு வாகன நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து லே ஆஃப் அறிவித்தது. இதையடுத்து நிதி அமைச்சர் அடுத்தடுத்து பல சலுகைகளை அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் கோவாவில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிர்மலா சீதாராமன் இன்று கார்ப்பரேட் வரி, செஸ் வரி உள்ளிட்டவற்றைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி  உள்நாட்டு நிறுவனங்களுக்கும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெருநிறுவன வரி விகிதங்களைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த செஸ் மற்றும் கூடுதல் வரியைச் சேர்ந்த கார்பரேட் வரி 25.17 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு இணைக்கப்பட்ட எந்தவொரு புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனமும் 15 சதவிகித வரி செலுத்தினால் போதுமானது. மேட் வரி 18.5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று குறைந்தபட்ச மாற்று வரியான மேட் வரியை 22சதவிகித வருமான வரி கட்டும் நிறுவனங்கள் செலுத்தத் தேவையில்லை.

மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் பங்குகள் மூலம் கிடைக்கும் தொகைக்குக் கூடுதல் வரி விதிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. அதுபோன்று ஜூலை 5 ஆம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பங்குகளை வாங்குதல் அல்லது விற்பனை செய்திருந்தாலோ சூப்பர் ரிச் வரி விதிக்கப்படாது எனவும் நிர்மலா சீத்தாராமன் அதிரடியாக தெரிவித்தார்..

click me!