இடைத் தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சரின் மகள் ! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 7:49 PM IST
Highlights

புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறப்போகும் இடைத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக முதலமைச்சர் நாராயணசாமியின் மகளை நிறுத்தப்போவதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில், 2016-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியலிங்கம் சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்துவந்தார்,

அண்மையில் நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்தியலிங்கம் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதி காலியானது என்று அறிவிக்கப்பட்டது.

ஓரிரு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலியாகவுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை அறிவிக்கப்போகிறது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் காமராஜர் நகர் தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக -பாஜக கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும்  பாஜக வேட்பாளராகக் கண்ணனை அறிவிக்க பாஜக தலைமை ஆலோசனை செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் கட்சி சார்பான வேட்பாளரைத் தேர்வு செய்வதில் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும் மூத்த அமைச்சருமான நமச்சிவாயத்திற்கும், முதலமைச்சர்  நாராயணசாமிக்கும் கடுமையான போட்டி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர்  நாராயணசாமி தனது மகள் விஜயகுமாரியை காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்த முடிவு செய்திருக்கிறார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தால் தனக்காக நெல்லித் தோப்பு தொகுதியை விட்டுக்கொடுத்த ஜான்குமாரை நிறுத்தலாமா ? என்றும் ஆலோசித்து வருகிறார் நாராயணசாமி.

அதேநேரம் புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவராகவும், நியமன எம்.எல்.ஏ.வாகவும் இருந்த அண்ணாமலை ரெட்டியார் மகன் ஜெயக்குமாரை நிறுத்த முடிவு செய்திருக்கிறார். 

தற்போது இந்த இரு தரப்பினருக்கும் இடையே சீட் வாங்குவதில் பெரும் இழுபறி நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவெடுக்கப் போகிறதோ ?

click me!