மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இதுவரை என்னை, கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் யாரும் சந்திக்கவில்லை என்றும் நான் அவர்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி முன்பு கதறி அழுதார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியை நிர்மலா, மாணவிகளை விபச்சாரத்துக்கு அழைத்தாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தவிர ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இது குறித்து தனியாக விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கிட்டதட்ட 8 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இதுவரை கணவரோ, குழந்தைகளோ, குடும்பத்தினரோ, உறவினர்களோ யாரும் வந்து பார்க்கவில்லை.
ஏற்கனவே அவர் குறித்து பத்திரிக்கைகளிலும், சமூக ஊடகங்களிலுல் வெளியான செய்திகளால் நொந்து போயுள்ள அவர், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியைப் பார்த்து கதறி அழுதார்.
இதையடுத்து பேசிய அவர், இதுவரை என்னை, கணவர், குழந்தைகள், குடும்பத்தினர் என யாரும் சந்திக்கவில்லை என்றும் நான் அவர்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மேலும் எனது நிலையை அவர்களிடம் விளக்க வேண்டும். இதற்காக அவர்கள் வந்து என்னை சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.