
கல்லூரி மாணவிக்கு தவறான வழி காட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் குழுவுக்கு 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்தது தொடர்பான ஆடியோ வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து நிர்மலா தேவி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவரது வாக்குமூலத்தைக் கொண்டு, மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, அவரது நண்பர் தங்கபாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், அதிகாரிகள் மற்றும் சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது. சந்தானம் குழுவின் விசாரணை இன்றுடன் முடிந்து, அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில், மேலும் 2 வார கால அவகாசம் கேட்டது. இதனை அடுத்து, சந்தானம் குழுவுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.