தமிழ்நாட்டில் குண்டு வெடிக்க செய்த சதியை முறிடித்த என்ஐஏ ! மக்கள் பாராட்டு !!

By Selvanayagam PFirst Published Jul 16, 2019, 9:43 AM IST
Highlights

'அன்சருல்லா' என்ற தீவிரவாத அமைப்புக்கு துபாயில் நிதி திரட்டி தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் 14 பேரை டெல்லியில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்தனர். இந்த திட்டத்தை  உரிய நேரத்தில் கண்டுபிடித்து சதியை முறியடித்த என்ஐஏ அமைப்பினருக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தியதில் 250 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த கொடூரத்தை மேற்கு ஆசிய நாடுகளில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் தலைமை ஏற்று நடத்திய 'தேசிய தவ்ஹீத் ஜமாத்' நிர்வாகி ஜஹ்ரான் ஹாஷிம் தமிழகத்தில் பதுங்கி இருந்தது என்ஐஏ என்ற தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தமிழகத்தில் பயங்கரவாத செயலுக்கு எதிராக என்ஐஏ அமைப்பினர் அதிரடி வேட்டையை துவக்கினர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சேர்ந்த அசாருதீன்  என்பவரை கைது செய்தனர்.

என்ஐஏ அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஹசன் அலி ,  ஹாரிஸ் முகமது ஆகியோர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய்க்கு அனுப்பி உள்ளனர்.

அவர்களை வேலைக்கு அமர்த்தி சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல் - குவைதாவின் கிளையான 'அன்சருல்லா' என்ற அமைப்புக்கு நிதி திரட்டி வருகின்றனர். அந்த அமைப்பின் உதவியுடன் தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து என்ஐஏ  அதிகாரிகள் கோவை, ராமநாதபுரம், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினார்கள். அப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்பில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தகவல் மத்திய அரசு வாயிலாக துபாய் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துபாய் உளவு போலீசார் அங்கு தங்கியிருந்த சென்னை, மதுரை, திருவாரூர், கீழக்கரை, தேனி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 14 பேர் பயன்படுத்திய 'வாட்ஸ் ஆப்' குழுவில் ஊடுருவி ரகசியமாக கண்காணித்தனர். அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என நாகப்பட்டினத்தில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வந்ததும் துபாய் போலீசாருக்கு தெரிய வந்தது. அதன்படி 14 பேரும் தற்கொலை படையாக மாற திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் நாடு கடத்தப்பட்டு டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களை கைது செய்த என்ஐஏ அமைப்பினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தமிழகத்தில்  நிகழவிருந்த ஒரு மிகப் பெரிய குண்டு வெடிப்பு சதியை என்ஐஏ அமைப்பினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

click me!