வேலூர் முடிஞ்சது... செப்டம்பரில் நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல்..? அரசியல்வாதிகளுக்கு நோ ரெஸ்ட்!

By Asianet TamilFirst Published Aug 5, 2019, 7:22 AM IST
Highlights

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பண்டிகைகளும் வரிசைக்கட்டி வரும் காலமாகும். எனவே அதற்கு முன்பாக இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றன. 

வேலூர் தேர்தல் இன்று முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் நிறுத்தப்பட்டார். நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார், தேர்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் முதல் இத்தொகுதி காலியாக இருந்துவருகிறது. 
இதேபோல கடந்த ஜூன் மாதம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், இத்தொகுதியும் காலியானது. இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த நவம்பர் இறுதி வரை கால அவகாசம் உள்ளது. வேலூர் தேர்தலோடு சேர்ந்து இத்தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், வேலூருக்கு மட்டும் தனியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பண்டிகைகளும் வரிசைக்கட்டி வரும் காலமாகும்.


எனவே அதற்கு முன்பாக இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றன. அதன் அடிப்படையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியகியுள்ளது.

click me!