
கொண்டவன் இல்லாத வீட்டில் கண்டவன் எல்லாம் அதிகாரம் செய்வான் என்பது போல, ஜெயலலிதா என்ற ஆளுமை உள்ள ஒரு தலைவர் அதிமுகவில் இல்லாததால், அக்கட்சி பல்வேறு அணிகளாகி, ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவானது சசிகலா அணி, பன்னீர் அணி என இரண்டாக பிளவுபட்டது. இரு அணிகளிலும் எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்கள் இடம் பெற்றுள்ளனர்.
சசிகலா சிறைக்கு சென்ற சில நாட்களில், சசிகலா அணியானது, எடப்பாடி அணியாக மாறியது. தற்போது அமைச்சர்களுடன், பெரும்பாலான எம்.பி, எம்.எல்.ஏ க்கள் எடப்பாடி அணியில் உள்ளனர்.
எடப்பாடி அணியின் கை ஓங்கியதையடுத்து, திகார் சிறைக்கு சென்று வந்த உடனேயே தினகரன், தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்டும் வகையில், 34 எம்.எல்.ஏ க்கள், 5 எம்.பி க்களுடன் தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கினார்.
இது ஒரு புறம் இருக்க, ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா, மேற்கண்ட எந்த அணியிலும் இல்லாமல் தனியாக இயங்கி வந்தார்.
சசிகலா அணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது உள்ளிட்ட விஷயங்களின் அவர் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார். ஆனால் அவரை எந்த அணியிலும் சேர்த்து கொள்ளவில்லை.
இந்நிலையில், எவ்வளவுநாள் தனித்து இயங்குவது? என்று யோசித்து கொண்டிருந்த சசிகலா புஷ்பாவை, தென்மாவட்டத்தை சேர்ந்த சிலர், உசுப்பிவிட்டு தனி அணி ஒன்றை உருவாக்க சொல்லி இருக்கின்றனர்.
ஏற்கனவே, தனி கட்சி தொடங்கும் நிலையில் இருந்த சசிகலா புஷ்பா, அதை தற்காலிகமாக ஒத்தி போட்டிருந்தார்.
இந்நிலையில், தனி கட்சி தொடங்கி அவஸ்தை படுவதைவிட, அதிமுகவில் உள்ள சில எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் வைத்துக் கொண்டு, ஒரு தனி அணியாக செயல்படுவதே நல்லது என்று அவர் முடிவு செய்துள்ளார்.
சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக, தென்மாவட்டத்தை சேர்ந்த சில எம்.எல்.ஏ க்கள் ஆதரவு தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சசிகலா புஷ்பாவின் அணி விரைவில் உதயமாகும் என்று கூறப்படுகிறது.
சசிகலா புஷ்பாவின் அணி உருவாகும் நிலையில், எடப்பாடிக்கான தலைவலி மேலும் அதிகமாகும் என்பதால், அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்து இப்போதே ஆலோசனை நடத்த தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.