அமலுக்கு வந்தது புதிய கட்டுப்பாடுகள்.. முகக்கவசம் அணியாத 5.73 லட்சம் பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு.

By Ezhilarasan BabuFirst Published Apr 26, 2021, 5:53 PM IST
Highlights

அதாவது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வண்ணம் உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 9 ஆயிரத்து 788 வழக்குகள் பதியப்பட்டுள்ளது எனவும், கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாதவர்கள் மீது 5 லட்சத்து 73 ஆயிரத்து 446 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 464 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். 

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்து 862 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும்  512 வழக்குகள் பதியப்பட்டு 86 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக்கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது சென்னை காவல்துறை சார்பில் 20 ஆயிரத்து 053 வழக்குகள் பதியப்பட்டு இதுவரை 37 லட்சத்து 66 ஆயிரத்து 700 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் நடந்தவர்கள் மீது நேற்று மட்டும் 20 வழக்குகள் பதியப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை மொத்தம் 292 வழக்குகள் பதியப்பட்டு 1 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

அதாவது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் அதன் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வண்ணம் உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மறு உத்தரவு வரும் வரை அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பார்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன. அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!