ஓட்டு எண்ணிக்கை... சத்யபிரதா சாகு கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 26, 2021, 5:12 PM IST
Highlights

ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் ஆர்டி - பிசிஆர் சோதனை எடுத்து நெகட்டிவ் எனச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மே 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகள், கட்சிகளின் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். அவர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெற உள்ளது. அதேநேரத்தில், தற்போது கொரோனா 2வது அலை பரவல் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால், ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் கட்சிகளின் முகவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. 

இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவர்கள் 72 மணி நேரத்திற்கு முன் ஆர்டி - பிசிஆர் சோதனை எடுத்து நெகட்டிவ் எனச் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸாவது செலுத்தியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதி உண்டு.

ஓட்டு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் என அரசியல் கட்சிகள் எழுப்பினால் அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உபயோகப்படும். ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். இதுதவிர சமூக இடைவெளி, முகக்கவசம், சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்துவது, சுகாதாரத் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது எனத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். 

click me!