புதிய தேசிய கல்வி கொள்கை... அமைச்சர் பொன்முடி முன்னிலையில் அழுத்தமாக சொன்ன தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

By Asianet TamilFirst Published Dec 9, 2021, 9:35 PM IST
Highlights

தேசிய கல்விக் கொள்கை 2020-இல் கல்வியை உள்ளடக்கிய மற்றும் நவீனமாகவும் மாற்றுவதற்கு பிரதமரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொன்னார்கள். அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில்தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும் என்று தமிழக ஆளுநரும் வேந்தருமான ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி தமிழக ஆளுநரும் வேந்தருமான ஆர்.என்.ரவி பேசுகையில், “நாட்டின் சுதந்திரத்துக்காக கணக்கிலடங்காதோர் பல போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள் எல்லாம் ஏராளம். பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களில்

பலர் தற்போது வரைகூட அடையாளம் காணப்படவில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழகம் இதுதொடர்பாக ஓர் ஆய்வை நடத்த வேண்டும். நம் நாட்டுக்கு அவர்களது பங்களிப்பின் விவரங்களை அழியாத வகையில் பதிவு செய்ய வேண்டும். தியாகிகளையும், மாவீரர்களையும் மறக்கும் தேசம் நன்றி கெட்டது மட்டுமல்ல, இருண்ட எதிர்காலத்தை கொண்டதும் ஆகும். 

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பாரதியார், பாரதிதாசன் ஆகியோர் சொன்னார்கள். அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையில்தான் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது, உலகை இந்தியா வழிநடத்த உதவும். இந்தியாவை சமத்துவமான மற்றும் துடிப்பான அறிவுச் சமூகமாக மாற்றவும் உதவும். தற்போதைய கல்வி அமைப்பில் உள்ள தடைகளை அகற்ற தேசிய கல்விக் கொள்கை உதவி புரியும். இதில் முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தேசிய கல்விக் கொள்கை 2020-இல் கல்வியை உள்ளடக்கிய மற்றும் நவீனமாகவும் மாற்றுவதற்கு பிரதமரால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களை உயர் கல்விக்குத் தயார்படுத்த ப்ரேர்னா திட்டம், ஸ்டார்ட் அப்களை அமைப்பதற்கான சம்ரித்தித் திட்டம், மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க வழங்கப்படும் எஸ்எஸ்பிசிஏ திட்டம், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் எனப் பல திட்டங்கள் உள்ளன. இவை  எல்லாம் உலகளாவிய ஒத்துழைப்பு, பல தரப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான மற்ற முயற்சிகளாகும். அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றமான இந்தியாவை உலகுக்கு முன்மாதிரியாக கட்டமைக்கும் திட்டங்களும்கூட” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார். 

இந்த விழாவில் பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான க.பொன்முடி பேசுகையில், “தமிழகத்தில் இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும். மூன்றாவது மொழியைக் கற்கும் விருப்பத்தை மாணவர்களிடமே விட்டுவிடுவோம். எதையும் திணிக்க மாட்டோம்” என்று பேசினார். புதிய தேசிய கல்விக் கொள்கையை திமுக எதிர்க்கிறது.  இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி முன்னிலையில் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக அழுத்தமாக ஆளுநர் பேசியிருக்கிறார்.

click me!