கொரோனாவால் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரிசெய்ய புதிய இயக்கம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி.!

By Asianet TamilFirst Published Sep 8, 2021, 9:28 PM IST
Highlights

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரி செய்ய அரசு ஓர் இயக்கத்தைத் தொடங்க இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

ஆசிரியர் தினத்தையொட்டி மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “சில நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியானதாக இருக்கும், நெகிழ்ச்சியானதாக இருக்கும். இந்த நிகழ்ச்சி, மகிழ்ச்சி நெகிழ்ச்சி என இரண்டும் கலந்த நிகழ்வாகும். ஆசிரியர்கள் எப்போதுமே மாணவர்களின் மரியாதைக்குரியவர்கள். மாணவர்கள் படித்து முடித்து சென்றாலும் அவர்களுக்கு ஆசிரியர்கள் எப்போதும் ஆசிரியர்கள்தான். மரியாதைக்குரிய ஆசிரியப் பெருமக்களை மதிப்பிற்குரியவர்களாகப் போற்றிப் பாராட்டுகிற விழாவாக இது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
2020-2021-ஆம் கல்வியாண்டில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சார்ந்த 171 ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த 171 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளைச் சார்ந்த 33 ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளைச் சார்ந்த 2 ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் 2 பேர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆசிரியர்கள் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ரூ.10,000/- ரொக்கப் பரிசு, ரூ.2,500 மதிப்பிலான வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 53,005 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிப் பணி நியமனம் நிரந்தரம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த மாநில வாரியக் கல்வி, மெட்ரிகுலேசன் கல்வி, ஆங்கிலோ இந்தியக் கல்வி, கீழ்த்திசைக் கல்வி ஆகிய நான்கு கல்வி முறைகளையும் ஒருங்கிணைத்து சமச்சீர்க் கல்வி முறை 2010-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் கல்விக் கனவை சமச்சீர்க் கல்வி மூலம் நனவாக்கியவர் கருணாநிதி.
இந்த நிதிநிலை அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கென தமிழக அரசு ரூ.32,599.54 கோடி ஒதுக்கியுள்ளது. தனியொரு துறைக்கு ஒதுக்கப்படும் அதிகபட்சத் தொகை இது.  நாட்டில் உள்ள பள்ளிகளையும் 10 ஆண்டுகளில் படிந்துபோன இருளையும் எண்ணிப் பார்க்கும்போது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். முன்னாள் மாணவர் சங்கங்களோடு இணைந்து நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தின் கீழ் நிதி திரட்டி பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அதை நிர்வகிக்கும் குழுக்களில் பெற்றோர் பிரதிநிதிகள் சிலரைச் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் நல்லாசிரியர்கள் பலர் மாணவர்களிடம் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பித்தீர்கள். இதுபோன்ற சிறப்பு முயற்சியை அனைத்து குக்கிராமங்களுக்கும் எடுத்துச்சென்று பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பைச் சரிசெய்ய வேண்டும். இதற்கு அரசு ஓர் இயக்கத்தைத் தொடங்க இருக்கிறது. உங்களைப் போன்ற ஆசிரியர் சமூகம் இந்த இயக்கத்தை முன்னின்று வழிநடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 

click me!