புதிய இந்தியாவுக்கு யோகியின் ஆசிர்வாதம் தேவை.. அகிலேஷை வெறுப்பேற்றும் தம்பி மனைவி அபர்ணா.

By Ezhilarasan BabuFirst Published Jan 24, 2022, 5:34 PM IST
Highlights

கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அபர்ணா யாதவ் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய அபர்ணா யாதவ் நாட்டை காப்பாற்றிய கட்சி பாஜக, இந்த புதிய இந்தியாவிற்கு யோகியின் ஆசிர்வாதம் வேண்டும்,புதிய இந்தியா கட்டப்பட வேண்டும்.

தான் தேசத்திற்கு சேவை செய்ய வந்துள்ளேன் என்றும், புதிய இந்தியாவிற்கு யோகியின் ஆசிர்வாதம் வேண்டும் என்றும், தேசியவாதத்தின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாக பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த முலாயம் சிங் யாதவின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார். மீண்டும் உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே புதிய இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.  அம்மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் என்பதால் ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் உ.பியின் பக்கம் திரும்பியுள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. எப்படியும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில்தான் முலாயம் சிங் யாதவின் மருமகளும் அகிலேஷ் யாதவின் தம்பி மனைவியுமாகிய அபர்ணா யாதவ் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது சொந்த குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட அகிலேஷ் யாதவால் சமாளிக்க முடியவில்லை, இவர் எப்படி மாநிலத்தை சமாளிக்கப் போகிறார் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் அவரை கிண்டல் செய்து வருகின்றன.

அபர்ணா யாதவ் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவியின் மருமகள் ஆவார். பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்களை அகிலேஷ் சமாஜ்வாடி கட்சிக்கு இழுத்த நிலையில், அகிலேஷ் குடும்பத்தை சார்ந்த அபர்ணாவை பாஜகவுக்கு இழுத்து அகிலேஷ் யாதவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. இது ஒரு புறமிருக்க மறுபுறம் உ.பியில் தேர்தல் பிரச்சாரம்  வேகமாக நடந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக மகிலா படையை பாஜக களமிறங்கியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பெண் தலைவர்கள் பெரும்பாலனோர் காங்கிரஸ் மற்றும்  சமாஜ்வாடியிலுருந்து இலிருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் ஆவர். அந்தவகையில் முலாயம் சிங் யாதவின்  மருமகள் அபர்ணா யாதவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று பேட்டி கண்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது, 

கேள்வி: கட்சியில் இணைந்த பிறகு, வீடு வீடாகச் சென்று பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது, உங்கள் பங்கு எப்படி இருக்கும்?
பதில்: எனது பங்கு என்ன என்பதை கட்சியின் தலைமைதான் தீர்மானிக்கும். தேச சேவைக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன், தேர்தல் பிரசாரத்தில் பாஜகவின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.  கேள்வி: பாஜகவில் சேருவதற்கு முன்பு முலாயம் மற்றும் அகிலேஷ் யாதவை தொடர்பு கொள்ள முயற்சித்தீர்களா? பதில்: முடிந்த விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. அரசியல் என்பது நிகழ்காலம். நாம் நிகழ்காலத்தில் இருக்கிறோம்.

கேள்வி: தேர்தலில் உங்கள் பங்கு என்ன? பதில்: நானே எல்லாவற்றை குறித்தும் கவலைப்படுகிறேன் என்றால், எங்கள் கட்சியின் மூத்தவர்கள் என்ன செய்வார்கள். இன்று சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள், போஸ் ஜி சுதந்திரத்திற்காக போராட வேண்டாம் என்று நினைத்திருந்தால், நாடு எப்படி சுதந்திரம் பெற்றிருக்கும். நான் என்னை தேசத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அவர்கள் முன்னோக்கி நகர்ந்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதனால் நான் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆகியோரின் தொலைநோக்கு பார்வையை மனதில் கொண்டு பெண்களை பாதுகாப்பேன்.

கேள்வி: கடந்த 2017-ம் ஆண்டு கான்ட் தொகுதியில் உங்களுக்கு சீட் கிடைக்காததால்தான் பாஜகவில் இணைந்ததாக பேசப்படுகிறதே.
பதில்: 2017ல் சமாஜவாதிக்கு 7 ஆயிரம் ஒட்டுகள்கூட இல்லாத இடத்தில் அபர்ணா யாதவ் போட்டியிட்டார். அங்கு சாதி சமன்பாடு இல்லை, ஆனால் அங்கு  27 ஆண்டுகளில் அதிக வாக்குகள் பெற்றவள் நான். இதுவரை சீட்டுக்காக  சண்டை நடந்ததில்லை, இப்போதும் அப்படி நடக்கவில்லை, நான் நாட்டுக்கு சேவை செய்ய வந்துள்ளேன். பிரதமர் மற்றும் முதலமைச்சரின் பணி தேசியவாதத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்றார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்தில் அபர்ணா யாதவ் மற்றும் பிரியங்கா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய அபர்ணா யாதவ் நாட்டை காப்பாற்றிய கட்சி பாஜக, இந்த புதிய இந்தியாவிற்கு யோகியின் ஆசிர்வாதம் வேண்டும், புதிய இந்தியா கட்டப்பட வேண்டும், தேசியவாதத்தின் மீது இருக்கிற ஈர்ப்பு காரணமாக நான் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளேன். கொள்கைதான் முன்னே செல்லும் அதைப் பின்பற்றிதான் மனிதர்கள் செல்கின்றனர். மனிதன் இறக்கலாம் ஆனால் சித்தாந்தம் ஒருபோதும் இறக்காது. தேசத்தை காக்க பாஜகவை மீண்டும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். அதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றார். 
 

click me!