முதல்வர் முகவரி… புதிய துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Nov 14, 2021, 11:57 AM IST
Highlights

முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக தொகுதிகள் தோறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, நடைபெறும் தேர்தலில் தி.மு.க தான் ஆட்சிக்கு வரும், அவ்வாறு ஆட்சிக்கு வந்தவுடன், தனியாக துறை ஒன்றை ஏற்படுத்தி 100 நாட்களில் பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்திற்குச் சென்று, கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 அளிக்கும் விதமாக ரூ.2,000 வழங்கும் அரசாணை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணை உள்ளிட்ட 5 அரசாணைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதையடுத்து, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

அதன்படி, உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுகிறது. ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரின் முகவரி துறையில் மனுக்கல் தீர்வுக்காண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது என்றும் முதலமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும் என்றும் இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறாா் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!