
எடப்பாடி பழனிசாமி முதல் நிலோபர் கபில் வரை உள்ள தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு புதிய கார்கள் கொடுக்கப்பட உள்ளன.
கடந்த ஆட்சியில் இன்னோவா கார் High end மாடல் அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டது.
2016ல் அதிமுக ஆட்சியமைத்த பிறகு 15க்கும் புதிய கார்கள் புதிய அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்டன பழைய அமைச்சர்கள் முன்பு பயன்படுத்திய இன்னோவா கார்களையே பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் 16 புதிய இன்னோவா கிறிஸ்டா மாடல் வண்டிகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளன.
அந்த வண்டிகளில் கொடி கம்பி, சுழல் விளக்குகள் பொருத்தும் பணி நடைப்பெற்று வருகின்றன.
சுமார் 23 லட்சம் மதிப்புள்ள இந்த வகை சொகுசு கார்கள் இன்னும் ஒரு சில தினங்களில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
ஓபிஎஸ் முதலவராக இருந்தபோது சிமென்ட் கலரிலான இன்னோவா கிறிஸ்டா வண்டியைத்தான் பயன்படுத்தினார்.
அது தற்போது அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
தற்போது அதிமுகவினரிடையே பெருத்த அரசியல் குழப்பம் மற்றும் ஜெ.மறைவால் ஏற்பட்டுள்ள 2 மாத பெரும் இடைவெளியால் அரசு நிர்வாகம் செயலற்று போயுள்ளது.
போதாத குறைக்கு நெடுவாசல் போராட்டம் தமிழகத்தையே அச்சுறுத்தும் வறட்சி ஆகியவை தலை விரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த உயர் ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இவ்வளவு பிரச்சனைக்கிடையில் இந்த கார்கள் தேவையா எனவும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் அரசு தரப்பிலோ இது முன்பே திட்டமிடப்பட்டு பணம் செலுத்தப்பட்டு தற்போதுதான் டெலிவரி கொடுக்கபட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ மழை வெயில் புயல் அடித்தாலும் நாட்டில் என்ன நடந்தாலும் அமைச்சர்களுக்கு நடக்க வேண்டியதெல்லாம் சரியான நேரத்தில் நடந்து விடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தான்.