
ஏழை – எளிய மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த முன்பதிவில்லா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, இன்று முதல் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்குத் நாள்தோறும் இயக்கப்படுகிறது. முன்பதிவில்லாத முறையில் இந்த ரயில் நாள்தோறும் இயக்கப்படுவதால் சாமானிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் வகையில் அந்த்யோதயா ரயில் சேவை இயக்கப்படும் என கடந்த ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுவந்த நிலையில், ஏப்ரல் 27-ம் தேதி முதல் சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லை வரை இரு மார்க்கத்திலும் இந்த ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
ஏழை, எளிய பயணிகள் ரயிலில் செல்வதற்கு ஏற்ற வகையில் 200 ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படும் இந்த ரயில் சேவை குறித்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ந்திருந்த நிலையில், மறுநாளிலேயே தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்தச் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் சாமான்ய மக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு கட்டணம் உள்ளது.
இந்நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தாம்பரம்-நெல்லை இடையேயான அந்த்யோதயா ரயில் சேவை இன்று முதல் தொடங்க இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.மத்திய ரயில்வே அமைச்சர் ராஜன் கோஹைன் இன்று மாலை 4.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து இந்த ரயில் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.