தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. மக்களின் போராட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பாலும் அந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது பொட்டிபுரம் கிராமத்தில் மீண்டும் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணிகளை தொடங்க திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
undefined
இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு மையப் பகுதியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் தமிழகத்தில் மழை வளம் முற்றிலும் அழியும். இதனால் பேரழிவு ஏற்படும். விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். இத்திட்டம் அனுமதிக்கப்பட்டால், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மரங்கள் அழிக்கப்படும். ஆய்வுப் பணிகளில் பாறைகள் உடைக்கப்படும்போது மலைப்பகுதியில் நில அதிர்வு ஏற்படும். இதனால் அணைகள் உடையும். விலங்குகளும் குடியிருப்புகளும் அழியும் நிலை உருவாகும்.
நியூட்ரினோ திட்டத்தை மேற்கொள்ள இந்தியா உட்பட உலகின் 7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. அவற்றில், இந்தியாவை தவிர அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட மற்ற 6 நாடுகளும் கடலுக்கடியிலும் மக்கள் வசிக்காத பாலைவனப் பகுதியிலும் திட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், இந்தியாவில் மட்டும் தான் மக்கள் வசிக்கும் பகுதியில் மேற்கொள்கின்றனர். அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் மக்கள் வசிக்கும் வாழ்வாதாரப் பகுதிகளில் இத்திட்டத்தை அனுமதிப்பது ஏன்? தமிழகத்தை கதிரியக்க ஆய்வுக்களமாக உருவாக்க மத்திய அரசு முயற்சிப்பதை ஏற்க இயலாது என பி.ஆர்.பாண்டியன் ஆதங்கத்துடன் பேசினார்.