
கனடாவில் மேற்படிப்பை முடித்துவிட்டு வரும் தங்கள் சக டாக்டரை, ஹாஸ்பிடலே கூடி நின்று வரவேற்பது போல் திகாரிலிருந்து தினகரன் வெளியே வரும்போது அவரை 1 கோடி தமிழர்கள் வரவேற்பார்கள் என்று பேசி ஏற்கனவே வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை மேலும் கடுப்பேத்தியிருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
டி.டி.வி. கைது செய்யப்பட்டதை கண்டித்து தேவகோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சம்பத் ’ஒ.பி.எஸ்.ஸுக்கு மருத்துவத்தை பற்றி என்ன தெரியும்? அவருக்கு ஜெயலலிதா மறைவின் மர்மத்தை பற்றி கேட்க என்ன அருகதை உள்ளது? ஜெயலலிதா எழுபத்தைந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது எழுபத்து நான்கு தலைவர்கள் வந்து அவரை பார்த்தார்கள். பின் எப்படி அந்த மரணத்தில் மர்மம் இருக்க முடியும்?” என்று கூறிவிட்டுதான் திகாரிலிருந்து வெளியே வரும் தினகரனை வரவேற்க தமிழ்மக்கள் வருவார்கள் என்று கூறியுள்ளார்.
சம்பத்தின் இந்த பேச்சை அல்வா துண்டு போல் அப்படியே கட் செய்து சோஷியல் மீடியாவில் போட்டு நக்கலும் நய்யாண்டியுமாக வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.
அவர்கள் கேட்டுள்ள எடக்கான கேள்விகள் இதோ...’’சசி மற்றும் தினகரனை விலக்கி வைத்துவிட்டு கட்சி நடத்தும் அணி சார்பாக நடந்த இந்த கூட்டத்தில் தினகரனுக்கு ஆதரவாக சகட்டுமேனிக்கு கூவியிருக்கிறாரே சம்பத், அப்படின்னா இந்த கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள அலவன்ஸை யார் கொடுத்திருப்பார்கள்?
ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்த 75 நாட்களில் 74 தலைவர்களேதான் வந்தார்களா இல்ல முன்னப்பின்ன இருக்குமா? சரி அதில் ஜெயலலிதாவை பார்த்த தலைவர்களை கைய தூக்க சொல்லுங்க பார்ப்போம். கவர்னருக்கே ”ஐசியு! பார்வையாளர் அனுமதி இல்லை”ன்னு போர்டை காட்டி அனுப்பிச்ச கோஷ்டிதானே நீங்க.
மருத்துவம் தெரிஞ்சவந்தான் ட்ரீட்மெண்டை பத்தி பேசணும்னு சொல்றீங்களே, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ட்ரீடெம்ண்ட் கொடுக்கப்பட்டதா சொல்ற நீங்க எந்த மெடிக்கல் காலேஜ்ல படிச்சீங்க சம்பத் டாக்டர்? நீங்க எஃப்.ஆர்.சி.எஸ்.ஸா, வெறும் எம்.பி.பி.எஸ்.ஸா? ஹோமியோபதியா? சித்தாவா? இல்ல டுபாக்கூர் டாக்டரா?
திகாரிலிருந்து வெளியே வர்ற தினகரனை வரவேற்க ஒரு கோடி தமிழருங்க வருவாங்கன்னு சொல்லியிருக்கிங்களே, ஒரு வேளை ஒருகோடியே நாலு பேர், எட்டு பேர்னு அதிகமா வந்துட்டா ஏத்துக்க மாட்டீங்களா? அது கெடக்கட்டும் திகார்ல இருந்து எப்போ வெளியே வருவோம்னு தினகரனுக்கே தெரியாதே அதுக்குள்ள வரவேற்கிற ஆள் எண்ணிக்கையை பத்தி தாறுமாறா பேசுறீங்களே......
அப்ப, இன்னோவா போர் அடிச்சுடுச்சா சார்?”_ என்று போட்டுத் தாக்கி இருக்கிறார்கள்.