
அணிகள் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்த பன்னீர்செல்வம், தொண்டர்களை சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
எடப்பாடியோ, அரசின் நல திட்டங்களை செயல் படுத்துவதிலும், மத்திய அரசை சாந்தப்படுத்துவதிலும் முனைப்பு காட்டி வருகிறார்.
ஆனால், பெங்களூரு புகழேந்தியும், நாஞ்சில் சம்பத்தும் தினகரனுக்கு ஆதரவாக, ஊர் ஊராக போராட்டம் நடத்துவதும், மேடைகளில் பேசுவதுமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், பன்னீர்செல்வம் ஒரு மண் பொம்மை என்றும், அமைச்சர்களுக்கு அதிகார தோற்று நோய் பிடித்திருக்கிறது என்றும் கூறி உள்ளார்.
அணிகள் இணைப்பே அவசியம் இல்லை என்று கூறும் சம்பத், மேலும் சில கருத்துக்களை கூறி உள்ளார் அதன் விவரம் வருமாறு:-
தற்போதுள்ள நிலையில், அணிகள் இணைப்புக்கு அவசியமே இல்லை, மாற்று கட்சியினருடன் சிரித்து பேசினாலே, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் ஒரு அமைப்பு அதிமுக.
கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கும், இரட்டை இல்லை சின்னம் முடக்கப்பட்டதற்கும், பன்னீரே முக்கிய காரணம். இப்படி ஒரு பச்சை துரோகத்தை செய்தவரை இனியும் தலையில் தூக்கி கொண்டு ஆடவேண்டுமா?
இந்த கட்சியை காட்டி கொடுத்து, டெல்லியின் காலில் விழுந்து கிடக்கும் அவரை நம்பி, இணைப்பு முயற்சியில் ஈடுபட தேவை இல்லை. பெரும்பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ க்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது அணிகள் இணைப்பே தேவை இல்லை.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப தகுதியான ஒரு நபராக, தினகரன் வளர்ந்து கொண்டிருந்தார். அதிமுகவை வழி நடத்தும் அனைத்து தகுதியும் அவருக்கு இருந்தது.
இந்நிலையில்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவேதான், அவருக்காக, நானும் புகழேந்தி போன்றவர்களும், கட்சி அனுமதியுடன் போராடுகிறோம்.
தினகரன் மீதான வழக்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்கு. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பாஜக வுக்கு இடையூறாக இருப்பார் என்பதன் காரணமாகவே, அவர் மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆள் தேடி அலைகிறது. அதற்கு கிடைத்த ஆள்தான் பன்னீர்செல்வம். அவரை பாஜகதான் இயக்குகிறது. அதனால்தான், அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகும்போது பாஜக வுக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தின் வறட்சி நிவாரணநிதி உள்ளிட்ட எந்த பிரச்சினைக்கும் செவி சாய்க்காத மத்திய அரசுக்கு, அவர் நன்றி சொல்ல வேண்டிய அவசியம் என்ன?.
அவர் பாஜகவின் ஆள்காட்டியாக இருப்பதால்தான், தினகரன் கைது முதல் கட்சியின் சின்னம் முடக்கப்படுவது வரை முன் கூட்டியே கூறுகிறார்.
பாஜக நடத்தும் பொம்மலாட்டத்திற்கு கிடைத்த பொம்மையே பன்னீர்செல்வம், அதுவும் மண்பொம்மை.
கொள்கை ரீதியாக சிந்திப்பவர்கள், இரு அணிகளும் இணைய வேண்டாம் என்கிறோம். அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் இணைய வேண்டும் என்கின்றனர்.
'அதிகாரம் ஒரு தொற்றுநோய்' என்று அண்ணா சொன்னார். அந்தத் தொற்றுநோய், அமைச்சர்களை தொற்றி இருக்கிறது என்றும் நாஞ்சில் சம்பத் குறிப்பிட்டார்.