
தான் தோண்றி அமைச்சர்கள், அடக்க ஆளில்லாத அதிகாரிகள், எங்கும் வெடிக்கும் மக்கள் போராட்டம், அரசு போக்குவரத்து துறை ஆரம்பிக்க துடிக்கும் ஸ்டிரைக்...என அசாதாரண சூழலில் உழலும் தமிழக அரசின் தலைக்கு மேல் பா.ஜ.க. எனும் லைஃப் சைஸ் கத்தி வேறு தொங்கிக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க.வின் ஆட்டுவிப்புக்கு எடப்பாடி அரசு ஆட துவங்கிவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் ஏற்கனவே மூட்டியிருக்கும் நெருப்பில் இன்று வெங்கய்யா நாயுடு வேறு நெய் வார்த்திருக்கிறார். அதுவும் பட்டாலே பத்திக் கொண்டு எரியும் தரமான பசு நெய்!
ஆம்! வெங்கய்யா நாயுடு இன்று தலைமை செயலகத்தில் நடக்கும் ஆயுவுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள், பல துறை அதிகாரிகள் இதில் கலந்து கொள்கின்றனர். ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசாளும்போது மத்திய அமைச்சர் வழிநடத்தும் கூட்டம் என்பது தலைமை செயலகத்தில் நடக்கும் என்பதை கனவில் கூட காண முடியாது. ஆனால் ஜெ., இல்லாத நிலையில் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
தென்னிந்திய அரசியலை கண்காணிக்கும் பிரதமரின் நிழலாக வர்ணிக்கப்படுபவர் வெங்கய்யா நாயுடு. அ.தி.மு.க.வை வளைத்து தங்களுக்கு ஏற்ப உருமாற்றுவதில் வெங்கய்யாவின் பங்கு மிக அலாதி. ஜெ., இறந்து ராஜாஜி ஹாலில் அவரது பூத உடல் வைக்கப்பட்டிருந்த போது கூட மணிக்கணக்காக அங்கே அமர்ந்து ஆறுதல் தந்ததுடன் அரசியல் ஆராய்ச்சியையும் செய்தவர் வெங்கய்யா. அதன் பிறகும் அ.தி.மு.க.வின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வந்து பல மூவ்களை செய்தவர்.
அவர்தான் இன்று தலைமை செயலகத்தினுள் ‘ஆய்வு கூட்டம்’ எனும் பெயரில் அடியெடுத்து வைக்கிறார். வெங்கய்யாவின் ஆய்வு நுழைவென்பது தமிழக அரசில் பா.ஜ.க. பங்கேற்கும் பெரும் முயற்சிக்கான டிரெய்லரே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
வெங்கய்யா சாமான்யமான அரசியல்வாதியல்ல ஆடும் மாட்டை ஆடியும், பாடும் மாட்டை பாடியும் கறப்பதில் வல்லவர். அவர் அ.தி.மு.க.வை சற்றே தலைமையாசிரிய தொனியில்தான் கையாள்கிறார் என்றும் அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர்.
இந்த சூழலில் இந்த விமர்சனத்தை மெய்ப்பிக்கும் விதமாகத்தான்...மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில் ‘மத்திய அரசோடு இணைந்து பணியாற்றவில்லை என்றால் தனித்துவிடப்படுவீர்கள்.’ என்று வெங்கய்யா வெடித்திருப்பது புலப்படுகிறது.
வெங்கய்யாவின் இந்த தலைமை செயலக விசிட் என்பது சாதாரண அரசு நடைமுறையே ஒழிய இதில் அரசியல் ஏதுமில்லை என்று தமிழக பா.ஜ.க. பூசி மெழுகுவதை சிறு குழந்தைகளான நாம் அப்படியே நம்புவோமாக. வெங்கய்யாவை தொடர்ந்து மத்திய அரசின் அதிகார மையங்கள் இனி அடிக்கடி கோட்டைக்குள் கோலோச்ச வரமாட்டார்கள் என்பதையும் அப்படியே நம்புவோமாக.
எது எப்படியோ! இனி...எடப்பாடி அண்ட்கோவிற்கு இனி ஒவ்வொரு நாள்ம் நித்யகண்டம் பூரண ஆயுதான் போல...