
உலகத்திலேயே, முயற்சி செய்தாலும் கிடைக்காத ஒன்று மக்கள் செல்வாக்குதான். ஆனால் அந்த செல்வாக்கு, எந்த முயற்சியும் செய்யாத ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு தாமாக கிடைத்தது.
ஆனால், தாமாக வீட்டு வாசலுக்கு வந்து கதவை தட்டிய மக்கள் செல்வாக்கு என்ற மகாலட்சுமியை, தமது அலட்சியத்தால் விரட்டி அடித்துவிட்டு தவிப்பவரும் தீபாவாகத்தான் இருக்கமுடியும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை, தீபா என்ற ரத்த உறவு ஒருவர் இருக்கிறார் என்பது, அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் பலருக்கு கூட தெரியாது.
மருத்துவ மனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை பார்க்க வந்த தீபாவுக்கு, அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் மீது அதிமுக தலைவர்கள் சிலருக்கும், பெரும்பாலான தொண்டர்களுக்கும் அனுதாபம் ஏற்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவின் தலைமையை பிடிக்காத அதிமுகவின் பெரும்பான்மையான தொண்டர்கள் பலரும், அவர் வீட்டு வாசல் முன் குவிந்து, அவரை அரசியலுக்கு அழைத்தனர்.
தமிழகம் முழுவதும் இருந்தது அவர் வீட்டு வாசல் முன் குவிந்த தொண்டர்களால், அந்த பகுதியில், பல நாட்கள் போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டது.
90 சதவிகித அதிமுக தொண்டர்கள் தீபாவின் பின்னால் அணிவகுப்பதாக கருத்து கணிப்புகள் எல்லாம் கூறின. தமிழகம் முழுவதும் திரும்பும் திசை எல்லாம், தீபாவின் போஸ்டர்களும், பேனர்களுமே கண்சிமிட்டன.
ஆனால், தீபா காட்டிய அளவுக்கு அதிகமான அலட்சியமும், நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடியும், அவரது ஆதரவாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
அந்த நேரத்தில், சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி பிடித்ததால், தீபா பேரவையில் இருந்த பெரும்பாலான தொண்டர்கள், பன்னீர் அணிக்கு தாவி விட்டனர்.
ஒரு கட்டத்தில், தீபாவின் கணவர் மாதவன், தனியாக பிரிந்து வந்து புதிதாக ஒரு கட்சியை தொடங்கும் அளவுக்கு, அவரது குடும்பத்திலேயே, அரசியலால் குழப்பம் வந்து விட்டது.
இந்நிலையில், தனியாக பேரவையை நடத்துவது கடினம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் தீபா பேரவையினர்.
இதையடுத்து, தீபா பேரவையை, அதிமுகவின் ஒரு அணியாக இணைத்து, சசிகலா மற்றும் பன்னீரின் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, தீபாவை கட்சியின் பொது செயலாளராக்குவது என்று அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா கொண்டுவந்த நலத்திட்டங்களை செயல்படுத்தவதில், அரசுக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இரு அணியினரிடம் ஏற்பட்ட போட்டியால், அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத்தையும் பறி கொடுத்து விட்டனர்.
எனவே, தீபா பேரவையை, அ.தி.மு.க.,வின் துணை அமைப்பாக மாற்றி, அ.தி.மு.க., - தீபா அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம் என்று தீபா பேரவை நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.
இதன் மூலம், இரட்டை இலை மற்றும் கட்சியை மீட்பது என்றும், தீபாவை பொதுச்செயலராக்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தாமாக வீட்டு கதவை தட்டிய ஸ்ரீதேவியை விரட்டியடித்த தீபா, தற்போது, இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க முயற்சி செய்கிறார்.
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சசிகலா மற்றும் பன்னீருக்கு முன்னால், தீபாவால் எப்படி போட்டி போட முடியும்? என்றும் அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.