உள்ளே பயம்...வெளியே சவா(ட)ல்...! மெரினா சந்திப்பு வெறும் அரசியல் நாடகம்தானா காயத்ரி ரகுராம்? - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

By Selvanayagam PFirst Published Nov 27, 2019, 9:45 PM IST
Highlights

சமீபத்தில் இந்து கோவில்கள் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனால் கொதித்தெழுந்த நடிகையும், நடன இயக்குநரும், பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டரில் திருமாவளவனை கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காயத்ரி ரகுராமின் இல்லத்தை முற்றுகையிட்டு வி.சி.க. தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அதையும், தனது ட்விட்டரில் வெளியிட்ட அவர், வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு மெரினாவுக்கு வருகிறேன். 

தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள் என நேரடியாக திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்தார். மேலும், இந்த விவகாரத்தை தான் சும்மா விடமாட்டேன், மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன், போலீசில் புகார் அளிப்பேன் என்றெல்லாம் அவர் ஆவேசமாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

 
இதனையடுத்து, நவம்பர்  27ம் தேதி எப்போது வரும் என எதிர்பார்த்து விசிக தொண்டர்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தனர். இந்த வேளையில், நேற்று (நவ.26) தனக்கு வி.சி. கட்சியினர் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படியும் சென்னை மாநகரக காவல் ஆணையரை சந்தித்து காயத்ரி ரகுராம் கோரிக்கை மனு அளித்தார். 

இதனால், திட்டமிட்டபடி காயத்ரி ரகுராம் இன்று (நவ.27) மெரினா பீச்சுக்கு வருவாரா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை எதிர்கொள்வாரா என சமூக வலைதளத்தில் விவாதமே கிளம்பியது. 

சமூகவலைதள பக்கத்தில் மட்டும் ஆவேசமாக சவால்விடுத்த அவர், திடீரென ஏன் பாதுகாப்பு கோர வேண்டும்? துணிச்சலுடன் சந்திக்க வேண்டியதுதானே என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். 


இந்த நிலையில், விசிக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமே காயத்ரி ரகுராமின் மெரினா வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது. ஆனால், கடற்கரையிலிருந்து காற்றுதான் வந்ததே தவிர, காயத்ரி ரகுராம் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த விசிக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள், "உள்ளே பயம்...வெளியே சவா(ட)ல்...! இது வெறும் அரசியல் நாடகம்தானா காயத்ரி ரகுராம்?" என கிண்டல் செய்ய தொடங்கினர். 


அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... என்பது போல் அலட்டிக் கொள்ளாத காயத்ரி ரகுராம், மெரினாவுக்கு வராததற்கு அட்டகாசமான விளக்கம் அளித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்காக காத்திருந்தேன். 

இந்த நிமிடம் வரை அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. விசிக தொண்டர்களை ஏமாற்றும்படி ஆகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 
காயத்ரி ரகுராமின் இந்தப் பதிவுக்கும் சமூக வலைதளத்தில் விசிகவினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

ஆனால் நெட்டிசன்களோ, முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை  இல்லாத குறையை தீர்த்து வைப்பதற்கு காயத்ரி ரகுராம் கிடைத்துவிட்ட உற்சாகத்தில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

click me!