நீட் தேர்வை ரத்து செய்ய தடைச் சட்டம் கொண்டு வர வேண்டும்.. பழைய ஃபார்முலாவை ஞாபகப்படுத்திய திருமாவளவன்.!

By Asianet TamilFirst Published Jul 15, 2021, 9:20 PM IST
Highlights

பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் என முந்தைய திமுக அரசு தடைச் சட்டம் கொண்டு வந்ததைப்போல நீட் தேர்வு வேண்டாம் என்ற தடைச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரியுள்ளார்.
 

அரியலூரில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, தமிழக அரசிடம் தன்னுடைய அறிக்கையை அளித்துள்ளது. அதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு வேண்டாம் எனச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கடந்த திமுக ஆட்சியில் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு பொறியியல் நுழைவுத் தேர்வை ரத்து செய்ததுபோல நீட் தேர்வுக்கும் தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளைத் திறப்பது என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பள்ளிகள் திறக்கும் எண்ணத்தைத் தமிழக அரசு ஒத்திப்போட வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் எண்ணத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேகதாது அணை விவகாரத்தில் அடுத்த கட்டமாக அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளோம்” என்று திருமாவளவன் தெரிவித்தார். 

click me!