நீட் தேர்வை 12 மணி நேரத்தில் இல்லாமல் செய்வோம் என்று சொன்னோமா..? அமைச்சர் மா.சு டெல்லியில் விளக்கம்.!

By Asianet TamilFirst Published Jul 15, 2021, 9:14 PM IST
Highlights

நீட் தேர்வை 12 மணி நேரத்தில் இல்லாமல் செய்வோம் என்று நாங்கள் எங்கும் சொல்லவில்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

டெல்லியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நீட் தேர்வு விவகாரத்தில் 13-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பல கட்டங்களாக நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லியும் எதுவும் இங்கே நடைபெறவில்லை. தற்போது மத்திய அமைச்சர் அதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார். அவரும் உண்மையை உணர்ந்துள்ளார். மத்திய அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், தற்போது அவரவர் மாநிலங்களில் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கிறோம். மலையாளம் போன்ற புதிய மொழிகளை இணைத்துள்ளோம் என்று சொன்னார்.
மேலும் நீட் தேர்வு மையங்களை அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் சொன்னார். அதில் எல்லாம் எங்களுக்குக் குறையில்லை. ஆனால், எங்களுடைய கோரிக்கை என்பது தேர்வே வேண்டாம் என்பதுதான். இதைத்தான் கோரிக்கை என்று எடுத்துச் சொன்னோம். ஏனென்றால் 13 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் பாடத்திட்டப் பிரச்சினை எல்லாம் இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். மத்திய அமைச்சரும் அதை உணர்ந்திருக்கிறார். அவர் சார்ந்த மாநிலத்திலும் இதுபோன்ற பிரச்சினை இருப்பதை எடுத்துச் சொன்னார். ஒடிசாவிலும் கூட இதுபோன்றதொரு நிலைமை உள்ளது என்று சொன்னார். நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
 நீட் தேர்வு ரத்தாகும் என்ற நம்பிக்கையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 12 மணி நேரத்தில் நீட் தேர்வே இல்லாமல் செய்துவிடுவோம் என்று சொன்னீர்களே என்பதுபோல் சில பேசிவருகிறார்கள். ஆனால், உண்மையில் என்ன சொன்னோம் என்றால், முதல் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைப்போம் என்றுதான் சொல்லியிருந்தோம். இன்னும் முதல் கூட்டத்தொடர் முடியவே இல்லை. பட்ஜெட் முடிந்தால்தான் முதல் கூட்டத்தொடர் முடியும். அதற்குள் தீர்மானம் வருகிறதா? என்றுதான் பார்க்கவேண்டும். தற்போது நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி மிக வேக வேகமாகப் பல விஷயங்கள் நடக்கின்றன. மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர் முயற்சி எடுத்து வருகிறார்.” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

click me!