பாஜகவினருக்கு ஷாக் கொடுத்த நயினார் நாகேந்திரன்.. வேட்பாளர் பட்டியல் வருவதற்குள் வேட்பு மனு தாக்கல் செய்தார்..

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2021, 2:05 PM IST
Highlights

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தான் விரும்பிய தொகுதிகளை பாஜக கேட்டு பெற்றுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பணியில் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக மாநில தலைவர் எல். முருகன் டெல்லி விரைந்துள்ளார்.  

பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை, ஆனால் அதற்கு முன்பாகவே அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிரடியாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது .நல்ல நேரம் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.  

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் தீவிரம்காட்டி வருகின்றன. சித்தாந்த ரீதியாக திமுகவை கடுமையாக எதிர்க்கும் பாஜக, அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த நான்கரை ஆண்டு காலமாக அதிமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த பாஜக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தாலும், தேர்தல் மூலம்  தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு அதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர்.  தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவிடம்  வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக அதில் வெற்றிபெறும் வகையில் வேட்பாளர்களை களமிறக்குவதில் கவனம் செலுத்து வருகிறது. 

 

அந்தவகையில் பாஜகவுக்கு,  நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், மொடக்குறிச்சி, ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு,  விருதுநகர்,  அரவக்குறிச்சி,  உதகமண்டலம்,  திருவையாறு,  திருநெல்வேலி,  தளி, தாராபுரம் , காரைக்குடி,  மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற்றுள்ளன. இதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார். 20 சட்டமன்ற தொகுதிகளில் பாஜக களம் காண உள்ள நிலையில், அதில் போட்டியிடுவதற்கான ஆர்வம் பாஜக தொண்டர்கள் மத்தியில் எப்போதும் இல்லாத அளவிற்கு மேலோங்கியுள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தான் விரும்பிய தொகுதிகளை பாஜக கேட்டு பெற்றுள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான பணியில் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக மாநில தலைவர் எல். முருகன் டெல்லி விரைந்துள்ளார். ஜேபி நடா சந்திப்புக்கு பின்னர் இன்று மாலையோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்று பாஜக சார்பில் நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு அக்கட்சியின் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்னரே அவர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அவரது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இன்று நல்ல நாள் என்பதால் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறேன் என கூறியுள்ளார். அறிவிப்பு வருவதற்கு முன்னரே இப்படி வேட்புமனு தாக்கல் செய்கிறீர்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு வந்து விடும், அறிவிப்பு வந்தவுடன் விரிவாக பேசுகிறேன் என கூறிச் சென்றார். 
 

click me!