AIADMK: திமுகவுக்கு வண்டியை திருப்பும் அதிமுக எம்பி...? ஸ்கெட்ச் போட்ட முக்கிய புள்ளி

By manimegalai aFirst Published Jan 29, 2022, 8:41 AM IST
Highlights

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் எம்பி திமுகவில் சேர முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன் எம்பி திமுகவில் சேர முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அண்ணா அறிவாலயம், திமுக… இந்த இரண்டுமே அதிமுகவுக்கும், ரத்தத்தின் ரத்தங்களுக்கும் எப்போதுமே வேப்பங்காய். திமுகவை அரசியல் களத்தில் என்றும் எப்போதும் வைரியாக வைத்திருக்கும் அதிமுகவின் எம்பி ஒருவர் அதே அண்ணா அறிவாலயம் சென்று திருமண விழாவில் பங்கேற்று திமுக எம்பியை பாராட்டி பேசினால் எப்படி இருக்கும்?

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்பி நவநீதகிருஷ்ணன் இதை  பண்ண, அவரது கட்சி பொறுப்பை காலி செய்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அதிமுக.

அதிமுக ராஜ்யசபா எம்பியான நவநீதகிருஷ்ணன் திமுகவின் எம்பியும், கனிமொழியின் ஆதரவாளருமான டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். இந்த விழா திமுகவின் கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின், எம்பி கனிமொழி, திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். அதே திருமண நிகழ்வில் பங்கேற்றவர் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன். திமுகவின் பரவ வைரியான, எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து, அறிவாலய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் எம்பி ஒருவர் கலந்து கொண்டது அப்போதே ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

இந்த ஆச்சரியங்களுக்கு இடையில், திமுக எம்பி கனிமொழியை பாராட்டி, புகழ்ந்து தள்ளி பேசியிருக்கிறார் நவநீதகிருஷ்ணன். அவர் பேசியது இதுதான்: டெல்லிக்கு எம்பியாக போன போது எனக்கு எதுவும் தெரியாமல் இருந்தது. அப்போது எனக்கு நாடாளுமன்ற நடைமுறைகளை சொல்லி கொடுத்தவர் கனிமொழி.  

நாடாளுமன்ற விவாதத்தின் போது நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. மத்திய அமைச்சர் ஒருவருடன் பேச தெரியாமல் நான் சண்டை போட்டு கொண்டு இருந்தேன். அப்போது கனிமொழி வந்து உதவினார்.

சண்டை போடாமல் அழுத்தம் திருத்தமாக பிரச்சனைகளை கூற வேண்டியது பற்றி சொல்லி கொடுத்தார், ராஜ்யசபாவில் எப்படி பேச வேண்டும் என்று கற்று கொடுத்தவர் கனிமொழி என்று பேசி புகழ்ந்து, பாராட்டி தள்ளி இருக்கிறார். அவரின் இந்த பாராட்டு பேச்சு அதிமுகவை உலுக்கி எடுத்து இருக்கிறது.

ஒரு அதிமுக எம்பி, திமுக எம்பியை பாராட்டி… அதிலும் அண்ணா அறிவாலயம் சென்று பாராட்டு என்பதை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை. கனிமொழியை பாராட்டி பேசிய ஒரேநாளில் அவரது கட்சி பதவியை அதிமுக தலைமை பறித்து அதிரடி காட்டி உள்ளது. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்தது.

நவநீதகிருஷ்ணன் மீதான இந்த நடவடிக்கை அதிமுகவின் கீழ்மட்ட தொண்டர்கள் வரை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அண்ணா அறிவாலயம் போய், திமுக எம்பி கனிமொழியை புகழ்ந்ததால் தான் அவரது (நவநீதகிருஷ்ணன்) கட்சி பதவி பறிக்கப்பட்டு உள்ளது.

திமுக எம்பியை பாராட்டுவது அதிமுகவை களங்கப்படுத்தும் விஷயம், இதை எப்படி அனுமதிக்க முடியும்? ஆகவே தான் உடனடி நடவடிக்கை என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆனால் அதிமுகவின் உள்விவகாரங்களை உற்று நோக்கி வரும் அரசியல் விமர்சகர்களின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது. டிகேஎஸ் இளங்கோவனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் நவநீத கிருஷ்ணன். அதனால் தான் அவரது இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்.

அதிமுகவில் நிலவும் இரட்டை தலைமை, கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடு, திமுகவின் ரெய்டு நெருக்கடி உள்ளிட்ட பல விவகாரங்களினால் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் புழுங்கி தவிக்கின்றனராம். பழைய அதிமுகவை எப்போது பார்க்க போகிறோம் என்று மனம் வேதனைப்பட்டவர்களில் நவநீதகிருஷ்ணனும் ஒருவராம் என்று கூறுகின்றனர்.

அதன் காரணமாக கடந்த சில மாதங்களாக பலரும் திமுக பக்கம் தாவிக் கொண்டு இருக்கின்றனர். அந்த பட்டியலில் நவநீதகிருஷ்ணன் பெயரும் உள்ளதாக அதிமுக தலைமைக்கு தெரிந்திருக்கிறது. எப்போது நடவடிக்கை என்று காத்திருந்த நேரத்தில் தான் திருமண விழா, அண்ணா அறிவாலயம், கனிமொழிக்கு பாராட்டு என்று சம்பவங்கள் நடக்க கட்சி பதவியை பறித்து அதிர்ச்சி காட்டியிருக்கிறது அதிமுக.

அதிமுகவின் இந்த அறிவிப்பை அடுத்து, நவநீதகிருஷ்ணனும் திமுக பக்கம் தாவ தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து அவரது நண்பரும், கனிமொழி ஆதரவாளரும், திமுக எம்பி ஒருவருமான முக்கிய நபரிடம் பேசப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நவநீதகிருஷ்ணனின் எம்பி பதவி வரும் ஜூன் மாதம் முடிய இருக்கிறது. ஆகவே கூடிய விரைவில்,  இடப்பெயர்ச்சி நடக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

click me!