
ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுக இரு அணிகளாக செயல்படுகிறது. இதில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற போட்டி கடுமையாக நிலவுகிறது.
இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறையில் உள்ளார்.
இதற்கிடையில், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக பிரிந்து இருந்த இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஆனால், பல்வேறு நிபந்தனைகள் காரணமாக இதுவரை பேச்சு வார்த்தைக்கான எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அதிமுக இரு அணிகளாக பிரிவதற்கு காரணம், பி.எச்.பாண்டியன்தான், என தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் 8ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் கொந்தளிப்புடன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. எந்த தலைவருக்கும் அந்த சின்னம் சொந்தமில்லை. அதை சொந்தம் கொண்டாடும் முழு உரிமை தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு. பிரிந்திருப்பவர்கள் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.
ஜெயலலிதா பொது செயலாளராக வரக்கூடாது என தடுத்து நிறுத்தும் செயலை செய்த பி.எச்.பாண்டியன்தான் இன்று அதிமுக இரு அணிகளாக பிரிவதற்கும் காரணமானவர். இதை அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.
இரட்டை இலை சின்னத்தை யார் முடக்க நினைத்தாலும் அவர்கள், அதிமுகவின் துரோகிகள் என்பது தொண்டர்களின் நிலைப்பாடு.