
எடப்பாடி இன்றும் எங்களுக்கு விசுவாசமாகத்தான் இருக்கிறார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்று அளித்த பேட்டியில் எம்.நடராஜன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. சிசிகலா சிறைக்கு சென்ற பின்னர், தினகரனை ஒதுக்கி வைத்தனர். இதன் மூலம் அதிமுக 3 அணிகளாக மாறியது.
சசிகலா குடும்பத்தையே கடசியைவிட்டு ஒதுக்கி வைக்கிறோம் என்று அதிமுக மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேட்டி அளித்தனர். தலைமை கழகத்தில் இருந்து சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டன. வெளிப்படையாக முட்டல் மோதல் தெரிந்தது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை துவங்கிய நிலையில், முற்றிலுமாக சசிகலா குடும்பத்தை ஒதுக்குவதாக ஜெயக்குமார் போன்றோர் பேட்டி அளித்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதில், எடப்பாடி தனியாக கூட்டம் நடத்தி அறிவிக்க, தினகரன் தனியாக அறிவிக்க சசிகலா சொல்லித்தான் எடப்பாடி அணியினர் ஆதரவு அளித்தார்கள் என்று தம்பிதுரை பேசியதற்கு எடப்பாடி அணி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சசிகலாவின் கட்டுப்பாட்டில் அதிமுக ஆட்சி இல்லை என்று எடப்பாடி அணியினர் கூறிவந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு எம். நடராஜன் அளித்த பேட்டியில், நீங்கள் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தபோது அவர் நம்பிக்கையாக இருப்பார் என்று தேர்வு செய்தீர்கள்.
இப்பவும் அவர் அதே விசுவாசத்துடன் இருக்கிறாரா? என்ற நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த எம்.நடராஜன், ஆமாம், இப்பவும் எடப்பாடி அதே விசுவாசத்துடன்தான் எங்களுடன் இருக்கிறார்.
சமீபத்தில் கூட ஜனாதிபதி தேர்தலுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தம்பிதுரையை சிறைக்கு அனுப்பி கேட்ட பின்னர், பொது செயலாளர் சசிகலாவின் ஆலோசனைப் பெற்ற பிறகே வாக்களிக்கும் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் சசிகலா அணிக்கு இன்றும் எடப்பாடி விசுவாசமாக இருக்கிறார் என்பது நடராஜன் பேட்டி மூலம் வெளியாகியுள்ளது.