
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக பொது செயலாளர் சசிகலாவை, கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று சந்தித்தார்.
நேற்று மும்பை செல்வதாக கூறிய டிடிவி தினகரன் இன்று பெங்களூர் சிறையில் சசிகலாவை திடீரென சந்தித்தார். அவருடன் கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உடனிருந்தார்.
சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் இதுவரை 6 முறை சந்தித்துள்ளார்.
இன்று சிறையில் இருக்கும் சசிகலா சந்தித்த பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஜெயக்குமார் பயத்தால் எனக்கு எதிராக ஏதோதோ பேசி வருகிறார். விரைவில் சரியாகி விடுவார்.
உங்களுக்கும் திவாகரனுக்கும் பிரச்சனை இருந்ததாகவும் அதை நடராஜன் வீட்டில் அமர்ந்து பேசி சமாதானம் செய்ததாகவும் பின்னர் உங்கள் இருவரையும் அழைத்து சசிகலா கண்டித்ததாகவும் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, நடராஜன் ஒன்றும் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் இல்லை. அவர் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. திவாகரனுக்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை நாங்கள் உறவினர்கள். சாதரணமாகத்தான் பேசி வருகிறோம் என்று கூறினார்.
சசிகலாவை, அதிமுகவின் பொது செயலாளர் என்ற முறையில் சந்திக்கவில்லை. சித்தி என்ற முறையில்தான் அவரைச் சந்தித்தேன்
ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குப் பிறகு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கை எடுப்பேன். ஆகஸ்ட் 5 முதல், பொது செயலாளர் ஆணையின்படி நான் செயல்படுவேன்.
நிர்பந்தம் அழுத்தம் காரணமாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கவில்லை. பொது செயலாளர் சசிகலாவின் அறிவுறுத்தலின்படியே குடியரசு தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்தேன்.
இவ்வாறு கூறினார்.