
மத்திய அரசு திட்டங்களை புதுவை அரசு தடுப்பது ஏன் என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் விவரம்: மத்தியில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கிறது, புதுவையில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் நேரடியாகவும் மறை முகமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் 50 ஆண்டுகளாக செய்யத் தவறியது ஏன் என்பதற்கு ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும்.
ஆட்சியில் அனைத்து கட்டத்திலும் ஊழல் செய்ததன் விளைவாக புதுச்சேரியில் அதிகமானோருக்கு வேலையின்மை, ரேஷன் கடைகளை மூடியது, பஞ்சாலைகள் மூடியது, ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை புதுச்சேரியில் முற்றிலும் நிராகரித்தது, குடிநீர் வரி, மின் வரி, வீட்டு வரி போன்றவை பல மடங்கு உயர்த்தியது. குப்பைக்கும் வரி போட்டது, இவைகள்தான் புதுவை அரசின் சாதனைகள், வேதனைகள். நிதியை சரியாக பயன்படுத்தாமல் நிர்வாகத்திறமை இன்றி நடந்ததன் விளைவாக பொதுத்துறை, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சுமார் பத்தாயிரம் பேருக்கு சரிவர சம்பளம் வழங்கவில்லை.
மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் முற்றிலும் செயல்படவில்லை, மத்திய அரசுக்கு நற்பெயர் வந்து விடும் என்ற ஒரே நோக்கத்தில் மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் தடுப்பது மட்டும்தான் முதல் அமைச்சர் நாராயணசாமி வேலையாக இருந்தது. இதுபோன்று நிர்வாகத் திறமை இல்லாமல் செயல்படும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர ராகுல் காந்தி ஏன் மக்களிடம் வாக்குகளை கேட்கிறார் என்பதையும் விளக்க வேண்டும். புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி இதுவரை மக்களை எந்த நிலையிலும் மதிப்பளிக்க வில்லை மற்றும் மக்கள் முன்னேற்றத்திற்காக எந்த செயலையும் மனப்பூர்வமாக செய்யவில்லை இவையெல்லாம் மக்களின் மனக் குமுறல்கள், இந்த மக்கள் குமுறல்களுக்கு ராகுல்காந்தி பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.