பச்சைப் பொய் சொல்கிறார் மு.க.ஸ்டாலின்... கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி..!

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2021, 5:31 PM IST
Highlights

நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நீங்கள் எப்பொழுது மனு வாங்கினீர்கள்? டிராமா எல்லாம் செல்லுபடியாகாது, நீங்கள் நடிக்கின்ற நடிப்பு எடுபடாது. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

இந்தியாவிலேயே மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. மகளிர் சுயமாக தங்கள் குடும்பத்தை நடத்திட, சுயமாக தொழில் தொடங்க வேண்டும். நிதி ஆதாரம் பெருக வேண்டும். அதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்தார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகமான வங்கி இணைப்பு கடன் பெற்று கொடுத்தார்கள்.

அம்மாவின் அரசும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் 82 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் வழங்கி, இந்த குழுக்கள் இன்றைக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கொரோனா காலக்கட்டத்திலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் 12,500 கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் பெற்று தந்த அரசு அம்மாவின் அரசு. 

திமுகவினர் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள். தேர்தல் முடிந்து விட்டால் அந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள். தேர்தல் நேரத்தில் தான் திமுகவினரை பார்க்க முடியும். ஆனால் அண்ணா திமுக அப்படிப்பட்ட கட்சியல்ல. தேர்தல் நேரத்தில் கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற கட்சி அண்ணா திமுக. மாண்புமிகு அம்மா அவர்கள், பொருளாதார சூழ்நிலை காரணமாக மடிக்கணினி வாங்க முடியாத நிலையில் உள்ள ஏழை எளிய மாணவர்களும் உயர்கல்வி கற்க வேண்டும் என்று சிந்தித்து, விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு  

52 லட்சம் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு. ஒரு மடிக்கணினி விலை 12 ஆயிரம் ரூபாய். மாண்புமிகு அம்மா அவர்கள் தாயாக இருந்து ஏழை எளிய மாணவர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அந்த தாயின் ஸ்தானத்தில் இருந்து விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி விஞ்ஞான கல்வி பெற வழிவகை செய்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அந்த திட்டத்தையும் சிறப்பான முறையில் மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.  

அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு விலையில்லா காலணி, சீருடை, பாடப்புத்தகம், நோட்டு, சைக்கிள், அறிவுப்பூர்வமான கல்வி கிடைக்க மடிக்கணினி என அனைத்தும் வழங்கிய அரசு அண்ணா திமுக அரசு. இரு பெரும் தலைவர்கள் மக்களுக்குச் செய்ய நினைத்தவற்றை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மக்களுக்காக பாடுபடுகிற கட்சி அதிமுக. மக்களுக்காக திட்டங்களைக் கொண்டு வந்து அதன் மூலம் நன்மை கிடைக்கச் செய்யும் அரசு அம்மாவின் அரசு. 

ஆனால் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நான்காண்டு காலத்தில் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று பச்சைப் பொய் சொல்கிறார். நான் எவ்வளவோ திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன், இதை யாராலும் மறுக்க முடியாது. அதனால்தான், தினந்தோறும் பத்திரிகையில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. நான் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பின்படி, பெறப்பட்ட 9 இலட்சத்து 77 ஆயிரம் மனுக்களில் 5 இலட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிராகரிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் மனுதாரருக்கு அனுப்பப்பட்டது. 

நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. நீங்கள் எப்பொழுது மனு வாங்கினீர்கள்? டிராமா எல்லாம் செல்லுபடியாகாது, நீங்கள் நடிக்கின்ற நடிப்பு எடுபடாது. ஏற்கனவே நாங்கள் பொதுமக்களிடத்தில் மனுக்களை வாங்கி நிறைவேற்றி விட்டோம். அதுமட்டுமல்லாமல், இன்னும் புதுமையான திட்டத்தை 2020 செப்டம்பர் மாதத்தில் சட்டமன்றத்தில் நான் தெரிவித்தேன். இவர்கள்தான் சட்டமன்றத்திற்கு வருவதில்லையே, வந்தால்தானே தெரியும். சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ், நீங்கள் வீட்டிலிருந்தே செல்போன் மூலமாக உங்கள் பிரச்சனையை சம்பந்தப்பட்ட துறைக்கு தெரிவித்தால், அந்தத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்குமென்ற செய்தியை நாங்கள் சொன்னேன்.

அதை இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நான் துவக்கி வைத்தேன். முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மைத் திட்டம். உதவி மைய எண் 1100-ல் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகைளை சொன்னால், உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். இப்படி மக்களுக்கு எளிமையான முறையில் தங்களுடைய குறைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து வரும் இந்தத் திட்டத்தை கொண்டு வந்த அரசு எங்களுடைய அரசு திரு.ஸ்டாலின் அவர்களே. ஆனால், நீங்கள் மனுவாங்கி பெட்டியில் போட்டு பூட்டு போட்டு, சீல் வைத்து, உடைத்து படிக்க வேண்டிய அவசியமே இனி இல்லை’’என அவர் பேசினார். 

click me!